பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

பாண்டிய மன்னர்

நாட்டில் இந்நிலை ஏற்பட்டுவிட்டதால், மதுரை நகரில் வெகு நாளாய் வாழ்ந்து வந்த புலவரன்றிப் பிற நாட்டுப் புலவர்களின் போக்கு வரவு அருமையாய்ப் போயின. இந்நிலைமையிலிருந்த பாண்டிய நாட்டுக்கு வேறொரு புலவர் வந்தார். அவர் வறுமையின் பெருமையை உள்ளவாறு தம் வாழ்வில் உணர்ந்தவர். பாண்டிய வேந்தன் ஆதரவு கிடைப்பது அருமையெனப் பலர் கூற அறிந்தா ராயினும், 'நம் அதிருஷ்ட பலனையும் அறிந்து பார்ப்போம்,' என அவரும் வந்தார் அவர் தமிழ் நாட்டிற் பிறந்தவர் அல்லர்; வடநாட்டிற் பிறந்தவர். நாணயப் பரிசோதனை செய்யும் திறம் வாய்ந்த பண்டைப் பழங்குடி யொன்றிற் பிறந்தவர்; பெரிய சாத்தனார் என்னும் பெயரினர்; தம் நாட்டிலே மிகவும் விரும்பிப் பயிலப் பெறுவதும் போற்றுவாரைப் பெறா ததுமாகிய தமிழ் மொழியைப் பெரிதும் வருந்திக் கற்றுத் தேர்ந்திருந்தார். அவர் தமிழ் நாட்டு வேந்தன் எனப்பெறும் பாண்டியன் நன்மாறனிடம் தமது புலமையை விளக்கிப் பரிசில் பெற விழைந்ததும் வியப்பாகுமோ? உள் நாட்டு நிலைமையை நன்கறியாதவராகையால், தம் ஊரிலிருந்து வெகு சிரமப்பட்டு மதுரை வரை வந்து சேர்ந்தார்; அரண்மனையை அடைந்து, வாயில் காவலரிடம் தம் வருகையைத் தெரிவித்து அரச சமுகம் அடைய முயன்றார். அவர் எண்ணம் நிறைவேறுவது அரிதாயிற்று. மிகுந்த மனவருத்தம் கொண்டார். ஒரு நாள் மிக்க சிரமத்தின்மேல் அரசன் முன் போயினர்; தம் வருகையைத் தெரிவித்துச் சில செய்யுட்கள் பாடினர்.