பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

99

யிலும் பெரும்பகுதியான காலத்தைக் கழித்துக் குடிமக்களுக்கு இயன்றவளவு நன்மை புரிந்து அரசாண்டு வயோதிக தசை யடைந்தான். நல்லோர் குடியிற் பிறந்த வல்லோனாகையால், முதுமைப்பருவம் குறுகவும், நல்லோர் சேர்க்கையிலும் தத்துவ விசாரத்திலும் சிந்தை செலுத்தலாயினன். நரையும் திரையும் பஞ்சேந்திரியங்களின் சக்தி குறைதலும் ஆகிய குறிகள் தோன்றா முன்னரே இறைவன் திருவடி நீழல் எய்தலாகாதா என்ற எண்ணமுடையவ னாயினன், எண்ணிய எண்ணத்தில் திண்ணியராயிருப்பின் எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் என்று பெரியோர் கூறும் அறிவுரையும் அவன் உள்ளத்தில் உதித்து விளக்கம் பெற்றது.

அந்நிலையில் ஒரு நாள் மதுரை நகரில் உள்ள இளமரக்கா ஒன்றில் உலவச் சென்றான். மெய்காவலர் சிலர் இரு புடையிலும் வரவேற்று எவரும் தொடராது பின்னிற்கத் தனித்து ஏதோ பெருஞ்சிந்தனையுடையனாய் நன்மாற மன்னன் சோலைக்குட் புகுந்தான்; அவ்விளமாக் காவினுள் ஆனந்தத் தாண்டவ மாடியிருந்த இயற்கைச் செல்வியின் எழிலைக் கண்டு இன்புற்றான்; திலகமும் வகுளமும் வெட்சியும் குரவமும் மாவமும் கோங்கும் கொன்றையும் ஆதிய மரங்கள் மலர்க்காட்சி தந்ததைக் கண்டு மனம் பூரித்தான்; மல்லிகை முல்லை முதலிய கொடிகள் மலர்ந்திருந்த மாட்சியைக் கண்டு உலக மயக்கத்தை மறந்தான்; மணம் மிக்க மலர்கள் நிரம்பிய தடாகங்களின் கரைகளில் உள்ள ஆதனங்களிலே சிறிது நேரம் அமர்ந்து, நீர் வளர் மலர்ப் பொலிவை நிறைய நோக்கினான். கொடி வீடுகளின் உட்-