பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

101

டும், மற்றும் சில இலை மணத்தின் பொருட்டும், பின்னும் சில மலர் மணத்தின் பொருட்டுமாய்ப் பயிரிட்டு வளர்க்கப்பட்ட செடிகள் பல அங்கிருந்தன. எத்திசை நோக்கினும் மலர் நிறைந்த காட்சியாகவே இருந்ததால், அச்சோலை பன்மலரடுக்கிய நன்மாப் பந்தருடைய மனோகரமாகிய மாட்சியுடையதாய் விளங்கியது.

அச்சோலையின் நடு நாயகமாய் அமைந்த காட்சி நலஞ் சான்ற இலவந்திகையிலே தான் பெரும்பாலும் அரசன் அமர்ந்து இளைப்பாறுவது வழக்கம். அதன் அமைதி மிகவும் அற்புதமானது. பளிங்கினாற் கரையமைத்த சிறியதொரு நீர் நிலை அங்கு இருந்தது. அந்நீர் நிலையைச் சுற்றிலும் உள்ள பளிங்குக் கரையின் ஆறு கோணங்களிலும் ஆறு கந்தருவச் சிலைகள் இருந்தன. நடுவிலே சிறியதொரு திட்டு இருந்தது. அத்திட்டின் மேலும் அழகியதொரு பளிங்குச் சிலை நின்றது. நடு நின்ற பளிங்குச் சிலை, எல்லாவற்றிலும் வேலைப்பாட்டால் மிகவும் அழகுடையதாய் இருந்தது. அப்பளிங்குச்சிலை ஒவ்வொன்றிலுமிருந்து சிறு சிறு துளிகளாய் மழைத்துளிபோல நீர் பாய்ந்து பொய்கைக்குள் விழும். இப்படி விழும் நீரால் பொய்கை நிறைவதற்கு ஐந்து நாழிகைக்குமேல் ஆகும். நிறைந்து கரை தட்டியதும், கீழே வைத்திருந்த சில யந்திர விசைகளால் தண்ணீர் எல்லாம் விரைவிலே வெளியே ஓடி, அடுத்துள்ள மரங்களுக்குப் பாய்ந்துவிடும். இவ்வண்ணம் நிறைத்துப் போக்கப் பொறிப்படை அமைந்த இலவந்திகை அடைந்திருந்த காரணத்தினால், அச்சோலை இலவம் திகைச் சோலை என்ற பெயர் பெற்றது.