பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

பாண்டிய மன்னர்

கண்டவர் மனத்தைக் கவரும் எழில் வாய்ந்த அவ்விலவந்திகைக் கரையோரமாக அரசரும் அரசியரும் அமரத் தக்கவாறு ஆதனங்கள் பல அமைந்திருந்தன. அவற்றுட் சில பளிங்கினாலும் வேறு சில இரும்பினாலும் மற்றும் சில மரத்தினாலும் அழகிய பல வகை வேலைப் பாடுகளோடு அமைந்திருந்தன. அவற்றுட் பளிங்கினால் அமைந்த உயர்ந்த ஆதன மொன்றில் அரசர் பெருமான் அமர்ந்தனன். மெய் காவலர் சிறிது விலகி நின்றனர். இலவந்திகையின் காட்சியில் ஈடுபட்டிருந்த அரசன் சிறிது பொழுது சென்றதும், உள்ளத் தளர்ச்சியும் உடம்பின் சோர்வும் கொண்டு, ஒரு புறம் சாய்ந்தான்; தான் பிறந்த நாள் தொட்டு அந்நாள்காறும் தன் வாழ்விலே நிகழ்ந்துள்ள பல செய்திகளையும் பற்றி ஆராயலாயினன்; அறிவுடைப் பெரியரால் அலட்சியம் செய்யப்பெற்ற அற்பப் பொருள்களிலே ஆசை கொண்டு அன்புடையார் பலரோடு அருஞ்சமரம் புரிந்து அடைந்த பயன்களை யெல்லாம் அளந்து அளந்து பார்த்தான், இன்ப வாழ்வு என்பது அழிவற்றதாயிருக்க, இவ்வுலகில் இடமும் காலமும் எதுவும் இல்லை என்று தெளிவுற அறிந்தான்; பின் வரும் பாடல்களை இனிய இசையோடு பாடினன்:

மறப்பரிய பெரும்பொருளை

வழித்துணையை மறந்தயர்ந்தேன்

துறப்பரிய பெருவாழ்வைச்

சுகவழியைத் துறந்திருந்தேன்

பிறப்பரிய சிறப்புரிமை

பெறுமாறு முயன்றறியேன்