108
பாண்டிய மன்னர்
நாடெங்கும் தன் ஆணை செல்ல, அறமெனும் தெய்வம் துணை நின்றுதவ, மந்திரச் சுற்றத்தாரும் தந்திரச் சுற்றத்தாரும் நாட்டின் பொது மக்களுள் அறிவிற் சிறந்த பெரியோரும் நாட்டின் நலங்கருதி என்னென்ன இயற்றச் சொல்வரோ அவற்றை யெல்லாம் அற நெறி பிழையாதாற்றி, வணங்கிய மன்னர்க்குக் களைகணாகவும், வணங்காதார் மிடல் சாய்க்கும் தலைவனாகவும் பாண்டியன் நெடுஞ்செழியன் என்பான் அரசு புரிந்து வந்தனன். அவன், கல்வி, அறிவு, ஒழுக்கம், சிறப்பு, அரசியல் நெறி, ஆண்மை, மனத்திண்மை, அருள், பெருமை, போர்த் திறம் முதலிய எல்லா அரும்பெருங்குணங்களும் தன்னிடமே வந்து பொருந்த அமைந்திருந்தனன். அரசியற் பொறையை யேற்றுக்கொண்ட சிறு பருவத்திலேயே சிறந்த வீரனாகையால், நாடெங்கும் சென்று பகைஞரோடு பொருது, அவரை அடக்கி, நாட்டின் அளவை வளர்த்துக்கொண்டான். வட நாட்டிலும் பல ஆரிய வரசரோடு போர்செய்து அவர்களை வென்று பணியச் செய்தான். பல நூற்றுக் கணக்காகிய ஆரியப்படைஞர்களை வென்று அடக்கியதோடு ஆரிய வீரருட் சிலரையும் தன் நாட்டுக்குச் சிறைப்படுத்தி வந்தான். "மேலும் மேலும் வெற்றியில் விருப்பம் மிகப் பாரத பூமி முழுவதிலும் தன்னை எதிர்த்து நிற்போர் இன்மையால் வடமேற்குத் திசையில் உள்ள யவன நாடுகளையும் வென்று ஆங்கு நின்று அநேகம் யவன வீரரைச் சிறை செய்து வந்து, பாண்டிய நாட்டிலே பல வகை அருந்தொழில்கள் இயற்றவும் அரண் காவல் செய்யவும் அமர்த்தி வைத்தான்.