ஆரியப்படை கடந்த......நெடுஞ்செழியன்
119
மறைவிலே கவர்ந்துகொண்ட இராசமா தேவியின் காற்சிலம்பின் உண்மைச் செய்தி பலர் அறிய வெளிப்படும் முன்பு, மன்னவனிடம் அயலவனாகிய இப்புதியவனைக் குற்றவாளி யெனக் காட்டி, யான் என்னைக் காத்துக் கொள்வேன்,” என்று உளத்துள் எண்ணிச் சென்றான். அப்பொழுது, பாண்டியன் நெடுஞ்செழியன், மதுரை நகரில் வாழும் நாடக மகளிரது ஆடற் காட்சியும், அபிநய விசேஷமும் அதற்கேற்ப அமைந்த பாடல் வேறுபாடும், யாழிசையின் பயன்களும் கண்டு கேட்டு மயங்கி ஆனந்தித்திருந்தான். அச்செய்தியைக் கேள்வியுற்ற கோப்பெருந்தேவி, மனம் மாறுபட்டு ஊடல் கொண்டு, உண்மைக்காரணம் வெளிப்படாதொளித்துத் தலைநோய் வருத்தம் மிகுதி யென்று கூறி, அரசன் தன் அந்தப்புரத்துக்கு வரும் சமயத்தில் அவனை நேரில் வந்து காணாது மறைந்து ஒடுங்கினாள். மன்னவன் மந்திரச் சுற்றத்தாரின் நீங்கிச் கோப்பெருந்தேவி கோயிலை அடைந்து, காப்பிட்டிருந்த வாயிற் கடையில் நின்று, தேவியைப் புகழ்ந்து போற்றிக் கதவு திறப்பிக்குமாறு வேண்டிக்கொண்டு நின்றான். அச்சமயத்தில் அவனைக் கண்ட பொற்கொல்லன், அவன் காலில் விழுந்து வணங்கிப் பலவாறு துதித்து, "கன்னக் கோலும் கவைக் கோலும் இன்றித் தன் மனத்தாற் பயின்ற மந்திரமே துணையாகக் கொண்டு வாயிற் காவலரை மயக்கித்துயில் வித்து, அரண்மனைச் சிலம்பினைக் களவாடிய கள்வன், முழக்க மிக்க இம்மதுரைப் பேரூரில் உள்ள காவலர்க்கு மறைந்து, அடியேனுடைய புன் குடிலகத்தே வந்திருக்கின்றான்," என்று கூறினன்.