பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

3

கம் செய்வித்தனர். அமைச்சரும் சேனாபதியரும் பிற தலைவரும் அபிடேகம் செய்தனர். மந்திர உச்சாரணம் செய்து வைக்கப்பெற்றிருந்த பொற்குட நன்னீரை அந்தணத் தலைவர் பாண்டிய சிம்மாசனாதிபதி முதுகுடுமிக்கு அபிஷேகம் செய்தனர். பிறகு எங்கும் மங்கள வாழ்த்தும் வாத்திய முழக்கமும் உண்டாக, அரசன், உரிய சின்னங்களைத் தரித்துக்கொண்டு, சிங்காதனத் தமர்ந்தான். அவன் தலையின் மீது அன்பு பெருக முடி கவித்து, அமலன் அருள் பொழிக வென வாழ்த்தி, ஐம்பெருங்குழுவினர் அருகே நின்றனர். வணங்கற்குரியாரெல்லாம் தத்தமக்குரிய முறையிலே வந்து வணங்கினர். சிற்றரசுகளும் குறுநில மன்னரும் பிறரும் திறையளந்தனர். சேர சோழரும், வடவரசரும், அயலரசர் பிறரும் வந்து, தத்தமக்கேற்ற வண்ணம் வணங்கியும் வாழ்த்தியும் அரச மரியாதைகள் செய்து சென்றனர். முதுகுடுமி என்ற பாண்டிய மன்னன், முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பட்டப் பெயர் ஏற்றுக்கொண்டு, அரசுரிமை மேற்கொண்டான். அங்கு வந்திருந்த காரி கிழார், நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார் முதலிய புலவர்கள், அவனது வருங்காலப் பெருமையை அறிந்தார் போல, அவனை மனமார வாயார வாழ்த்தினார்கள். பேரிளம்பெண்டிர் பலர் குழுமிப் பல்லாண்டு பாடி ஆரத்தி எடுத்தனர்.

பட்டாபிஷேகம் செய்துகொண்ட பாண்டிய குல திலகனாகிய முதுகுடுமிப் பெருவழுதி, அன்று அங்குக் குழுமியிருந்த பெரியோர்களைப் பார்த்துப் பின் வருமாறு பேசினன்: