பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியப்படை கடந்த......நெடுஞ்செழியன்

123

பொருளை விடாது கொடும்பசி மிக்கபுலி போன்று சரக்காலத்து இடை யாமமாகிய கண் மயங்கும் இருள்வேளையில் ஊரார் எல்லாம் துயிலால் மயங்கிய அமயத்தில் ஒரு கள்வன் வந்து தோன்ற யான் என் கைவாளை உறை கழித்துப் பற்றினேன். அவ்வாளை அவன் பிடுங்கிக் கொள்ள, அவனையும் என் வாளையும் இன்னும் நான் எவ்விடத்துங் காணவில்லை. ஆதலால், இக்கள்வர் செய்கை எவருக்கும் அறியவரிது. இங்குச் சிலம்பு. கவர்ந்த கள்வனை நாம் நேரிற்கண்டும் நெகிழ விடுவோமாயின் அரசர் நம்மைத் தண்டிப்பார். ஆதலால், இதற்குச் செய்யற்குரிய தொன்றைத் துணிந்து கூறுமின். அறிவும் அனுபவமும் மிக்க உமது கருத்துப் போல நிறை வேற்றலாம்,' என்று பிற சேவகரைப் பார்த்தான்.

அவர்களுள் அறிவின்மையாற் கொலை யஞ்சாத கயவன் ஒருவன், கள் மயக்கம் மிக்க தன் அறிவுக்குத் தோற்றிய வண்ணம், கோவலனைக் கொல்வதே தகுதியென்று துணிந்து, தன் கையிற் பற்றிய வெள்வாளை வீசிக் கோவலனை வெட்டி வீழ்த்தினன். கோவலன் பண்டைவினைப் பயத்தால் உயிரிழந்தான். பாண்டியன் நெடுஞ்செழியன் செங்கோலும் வளைந்தது. இரு வினைகளும் செய்தாரை வந்து தொடர்தல் உறுதியே. ஆகையால், நல்வினையே செய்யப் பயில வேண்டும். பண்டை விளைவாகிய வினைப் பயத்தால் பாண்டியன் நெடுஞ்செழியனது வளையாத செங்கோல் வளைந்தது.

“நண்ணும் இருவினையும்; நண்ணுமின்கள் நல்லறமே
கண்ணகிதன் கேள்வன் காரணத்தால்-மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை

விளைவாகி வந்த வினை.”[1]

————————————————————————

  1. சிலப்பதிகாரம் - கொலைக்களக் காதை.