பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியப்படை கடந்த......நெடுஞ்செழியன்

127

விழுந்ததுபோல விழுந்து கண்சிவப்ப அழுதாள்; பிறகு தன் தலைவனை நினைந்து, “அந்தோ! நீர் எங்கிருக்கின்றீர்?" என்று கூறிப் புலம்பினள்,

பிறகு, ”தம்மோடு இன்புற வாழ்ந்த தம் கணவர் இறந்து அவர் உடம்பு எரியில் மூழ்க அதனைக்கண்டும் தம் உயிரை இழவாது துன்பம் மிக்க கைம்மை நோன்பு நோற்றுத் துயருறும் உயவற் பெண்டிரைப்போல, மக்களெல்லாம் தன்னைப் பழிக்கும்படி பாண்டியன் தவறு செய்ததால், அன்பரை இழந்து யான் துயருற்றழிவதோ? அகன்றமார்பினை யுடைய தமது கணவரை இழந்து ஏங்கி நீர்த் துறைகள் பலவற்றுள்ளும் தாம் குளிரப் புகுந்து மூழ்கித் துயருறும் உயவல் மகளிர்போலப் பாவம் பெருகி அறநிலை தவறிய பாண்டியன் செய்த குற்றத்தால் அறக்கடவுள் என்ற அறிவிலியே, யானோ துயருறுவேன்? செம்மையின் நீங்கிய கொடுங்கோலையுடைய தென்னவன் தவறிழைத்தலால், யான் கைம்மை கூர்ந்து. இளமையிலும் இசையிழந்து வாழ்வனோ?" என்று கூறிப் புலம்பிவிட்டு, ஆய மகளிரைப் பார்த்து, “வாய்ப்புடைத்தாகிய உற்பாத சாந்தியின் பொருட்டுக் குரவைக் கூத்து ஆடும்பொருட்டு இங்கு வந்து திரண்ட ஆய மகளிர் எல்லீரும் கேண்மின்கள். உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் அறியும் சாக்ஷியாகிய கதிர்ச் செல்வனே, நீ அறிய என் கணவர் கள்வரோ?" என்று கேட்டாள். அதற்கு மறு மொழியாக, அசரீரியாகிய ஒரு குரல், "தாயே, நின் கணவன் கள்வன் அல்லன்; அவனைக் கள்வன் என்ற இவ்வூரைத் தீயுண்ணும்,” என்றது.