பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

பாண்டிய மன்னர்


அதைக் கேட்டதும் கண்ணகி மற்றைச் சிலம்பைக் கையில் எடுத்துக்கொண்டு அவ்வாயர் பாடியினின்று மதுரை நகர்க்குட் புகுந்தாள். வழியிலே கற்புடைப் பெண்டிர் பலரைக் கண்டு, “அறநெறிக் கேற்ப முறை செய்ய அறியாத அரசனிருக்கும் ஊரில் இருந்து வாழும் கற்புடைப் பெண்டிர்காள், இவ்வநியாயத்தைக் கேளுங்கள்: உலகிற் பிறந்தார் ஒருவரும் படாத பெருந்துயரம் பட்டேன். அதனால், மரண வேதனையு மடைந்தேன். பிறர் எவரும் அடையாத பெரும்பேறும் யான் அடைந்தேன். என் கணவர் கள்வரல்லர். என் காற்சிலம்பு பெறும் விலையைக் கவருங் கருத்தால் அவரைக் கள்வர் என்ற ஒருபெயரிட்டுக் கொன்றனரே! தம் கணவரது அன்பைப் பெற்ற கற்புடைப் பெண்டிர் முன்னே என்னுடைய கணவரைப் பண்டுபோற் காண்பேனோ! அவ்வாறு காண்பேனாயின், அவர் வாக்காற் சொல்லும் குற்றமற்ற நல்லுரையைக் கேட்பேனோ? அவ்வாறு கேளாது ஒழிவேனேல், 'இவள் அக்கிரமம் செய்தாள்,' என்று என்னை இகழ்மின்கள்,” என்று பலவாறு கூறிப் புலம்பி யழுதாள்.

இவ்வாறு அல்லல் மிக ஆற்றாது அழும் கண்ணகியைக் கண்டு, மதுரையார் எல்லாரும் மிகவும் வருந்தி மயங்கி, “நமது மன்னவன் செங்கோல் இவட்குக் களையலாகாத் துன்பந் தந்து, தானும் வளைந்ததே! இஃது என்ன காரணமோ! மன்னர் மன்னனாகிய மதி போலும் வெண்குடையையுடைய நெடுஞ்செழியனது அரசியல் அழிந்ததே! இஃது என்னோ! உலகத்தை எல்லாம் குளிர்விக்கும் பாண்டியன் குளிர்ந்தகுடை வெம்மை