பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியப்படை கடந்த......நெடுஞ்செழியன்

135

படி, ‘இன்னவரைப் பார்த்து ஆறுக; இப்பொருளைப் பார்த்து ஆறுக’ என்று காட்டக் கூடிய பொருள் ஒன்றும் இல்லை,” என்று கூறிக்கொண்டு, கண்ணகியைத் தொழுது விழுந்தாள்.

அவளைக் கண்ட கண்ணகி, “பாவம் செய்தார்க்குத் தர்ம தேவதையே கூற்றமாம் என்னும் அறிவுடையோர் சொல் பழுதன்று. ஆகையால், சொல்லற்கரிய அக்கிரமத்தைச் செய்த பாண்டியன் தேவியே, தீவினைப் பயத்தால் இப்பாடுபடும் யான் செய்வது காண்: என் கண்ணிலிருந்து பொழிந்த கண்ணீரும் கையிலுள்ள ஒற்றைச் சிலம்பும் உயிர் ஒப்பாம் நாயகரையிழந்த தோற்றத்தோடு யான் வந்த காட்சியும் மாபாவியாகிய எனது கருங்குழலும் கண்டு நினது நாயகனாகிய கூடல் வேந்தன் நெடுஞ்செழியன் உயிரையிழந்து உடம்பு வெறுங் கூடு ஆக அரசு கட்டிலிற் கிடந்தான்,”என்று கூறினள்.

செங்கோன்மையைத் தம் செல்வமாகக் கருதிப் போற்றும் பாண்டியர் குடியிற் பிறந்த நெடுஞ்செழியன், அறம் நிலை பெற்ற தனது அவைக்களத்திலே செங்கோலும் குடையும் தளரத் தனது தேவி கண்ட கனா உள்ளவாறே பலிக்க இந்நாள்காறும் தான் காத்திருந்த அறத் தெய்வமே தன்னை பொறுக்க, உயிர் இழந்த அதனாலும் தன் பெருமையே விளக்கினான். ‘மானம் பட வரின் வாழாமை யினிது’ என்றும், ‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்,’ என்றும் பெரியார் பேசிய அறவுரை பொய்யாகப் பார்ப்பனோ அவ்வேந்தல்? களவு செய்தாரைக் கையறுத்தலே முறையென்று அறநூல் விதித்திருக்-