பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

5

டில் வந்து வாழும் அயல்நாட்டவர்க்கும் நம் நாட்டில் அவ்வுரிமைகளைப் பெற வேண்டுமென்ற எண்ணம் உண்டாதல் இயல்பே. ஆதலால், அவ்வாறு இங்கு வந்து வாழ்வோர்க்கு நாம் உறவின் முறையார் போலப் பழகி, வேண்டும் உதவிகள் செய்யவேண்டு மென்பதே, இந்நாட்டவர் அனைவரும் கடைப் 'பிடித்தற்குரிய அறநெறியாம். எத்தகையார்க்கும் நீதி ஒன்றே. உரிமைகள் ஒரு நிகரனவே. அறிவின் உயர்வும் கல்வியின் சிறப்பும் எக்குடியிலிருப்பினும் மதிக்கப்படும். ஆயினும், நம் முன்னோர் பின் பற்றி வந்த அறநூல் நெறிகட்கிணங்க நாமும் நடக்க வேண்டுவது முறையாதலால், படைப்பு முறையில் எங்கும் காணப்படும். உயர்வு தாழ்வுகள் போல அறிவு ஒழுக்கம் பழக்கம் முதலியவை காரணமாகப் பண்டே, யமைந்த குல வொழுக்கங்களுக்கு மாறுபாடாக எவரும் செல்லலாகாது. அவரவர்க்கேற்ற கர்மானுஷ்டானங்களை முறை பிறழாது இயற்றி வரல் வேண்டும். தருமத்தையே அடிப்படையாய்க் கொண்ட நம் அரசியல், எல்லா இனத்தாரும் அவரவர்க்குரிய தரும நெறியில் நின்றாலன்றிச் சீர்ப்பாடு அடையாது. எங்கும் நலம் பொங்குமாறு இனியதும் சிறந்ததும் ஆகிய அற நெறியிலே அனைவரும் வாழ்வோமாக.

அரசன் இவ்வாறு பேசி முடிந்ததும், புலவருள் நரைத்து முதிர்ந்த பெரியார் ஒருவர் எழுந்து, பின் வருமாறு வாழ்த்துக் கூறினர்:

‘அருந்தமி ழணங்கின் திருந்து திருப்பணி
உரிமையிற் பூண்ட பெருமையிற் சிறந்த
பாண்டியர் தொல்குடி பண்ணிய புண்ணியப்
பயனாத் தோன்றிய பாண்டிய மன்னவ,
விதுமரபு விளக்கும் முதுகுடுமிப் பெருவழுதி
அறநெறி புரிந்து மறநெறி கடிந்து