ஆரியப்படை கடந்த......நெடுஞ்செழியன்
141
“பொற்பு வழுதியுந்தன் பூவையரு மாளிகையும்
விற்பொலியுஞ் சேனையுமா வேழமும்-கற்புண்ணத்
தீத்தரு வெங்கூடற் றெய்வக் கடவுளரும்
கற்புடைப் பெண்டிரும் மாதவரும் நல்லோரும் கண்ணகி கற்பின் சிறப்பைப் பாராட்டினர். கண்ணகியென்ற பத்தினிக் கடவுளின் கோபத்தை ஆற்ற வேண்டும் என்ற கருத்தோடு மதுரை நகர்க் காவற்றெய்வம் ஆகிய மதுராபதி என்ற அணங்கு, அவளிடம் வந்தாள்.
அவள் சடை தாழ்ந்து பிறை யணிந்த தலையினள்; குவளை மலர்போலும் கண்ணும் வெள்ளொளி தங்கும் முகமும் உடையாள்; நிலவொளி ததும்பும் முத்துப் போன்ற நகையினள்; இடப்பால் நீல நிறமும் வலப்பால் பொன்னிறமும் பொருந்தியமேனியினள்; இடக்கையில் பொற்றாமரை மலரும் வலக்கையில் சுடர் மிக்க கொடுவாளும் பிடித்தவள்; வலக்காலில் வீரக்கழல் கட்டி இடக் காலில் சிலம்பு அரற்றும் செவ்வியினள் ; கொற்கை வேந்தன் குமரித் துறைவன் பொற்கோட்டு வரம்பன் பொதியப்பொருப்பன் ஆகிய பாண்டியன் நெடுஞ்செழியனது குலமுதற் கிழத்தியாகலின், மிகவும் மனம்வருந்தியிருந்தவள். அத்தகைய மதுராபதி திருமாபத்தினியாகிய கண்ணகியின் முன்னே வராமற் பின்னே நின்று கொண்டு, “பெண்ணே, யான் சொல்வது கேள்,” என, அதுகேட்ட கண்ணகி வலப்புறமாகத் தலையைத் திருப்பிச் சாய்த்து, “என்பின் வரும் நீ யார்? எனது துன்பத்தின் அளவை அறிவாயோ?” என்று கேட்டாள்.
- ↑ சிலப்பதிகாரம்-வஞ்சின மாலை