பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

33

சுட்டுணர்வு என்பது, எல்லாப் பொருளையும் உள்ள வளவில் அறிதல். திரிபுணர்ச்சி என்பது, இப்பியை வெள்ளி யென்று உணர்தல் போல்வது. ஐயம் என்பது, ‘தறியோ! மகனோ!’ என்று நிச்சயமற்ற உணர்ச்சி பெறுதல். தேராது தெளிதல் என்பது, வெட்ட வெளியில் தறியை மகன் என்றெண்ணல். கண்டுணராமை என்பது, புலி முதலியவை வந்தும் அறியாதிருப்பது போல்வது. இல் வழக்கு என்பது, முயற்கோடு என்று ஒரு பொருள் இல்லையாயினும், சொல்லளவால் உணர்தல். உணர்ந்ததை யுணர்தல் என்பது, பனிக்குத் தீச்சேர்ப்பது மருந்தாம் என்று எண்ணல் போல்வது. நினைப்பு என்பது, காரணம் அறியாமலே நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று பிறர் கூறக் கேட்டு அறிதல் போல்வது லோகாயதர், பௌத்தர், சாங்கியர், நையாயிகர், வைசேடிகர், மீமாஞ்சகர் என்போர் கொண்ட பிரமாணங்கள் பிரத்தியக்ஷம், அனுமானம், சாப்தம், உபமானம், அர்த்தாபத்தி, அபாவம், இவையே லோகாயதர் பிரத்தியக்ஷம் ஒன்றே கொள்வர். பௌத்தர் பிரத்தியக்ஷமும், அனுமானமும்; சாங்கியர் பிரத்தியக்ஷம், அனுமானம், சாப்தம் என்ற மூன்றும், நையாயிகர் உபமானத்தொடு நான்கும்; வைசேஷிகர் அர்த்தாபத்தியோடு ஐந்தும்; மீமாஞ்சகர் அபாவத்தோடு ஆறும் கொள்வர்.”

சைவ வாதி:- “சூரியன், சந்திரன், பிராணன், பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற எட்டு வகையும் உயிரும் உடம்புமாய் அமைந்திருப்போனும், சாஸ்திரங்களே உருவமாக உடையவனும், உயிர்களைப் படைத்துக் காத்துத் துடைத்து விளையாடும் பரம்பொருளும், தன்னின் வேறாகப் பொருள் ஒன்று இல்லாதவனும் ஆகிய சிவபெருமானே இறைவன். அவனைவணங்குதலாற் பசுக்களாகிய ஜீவர்கள், பாசம் ஒழிந்து, அவன் அருள் வயப்படுவார்கள். அதுவே வீடு வீடாமே.”

பிரமவாதி:- ‘உலகமெல்லாம் தேவன் இட்ட முட்டை. அவனே தலைவன்.’