பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

V

புலவராற் பாடப்படுவது அரசர்க்குப் பெருமையாகும். இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளக்கும் இயல்பு வாய்ந்த நல்லிசைப் புலவர் வாக்கால் ஒரு செய்யுளேனும் பெறுவது, தமிழ மன்னர்க்கும் வள்ளலர்க்கும் மிகவும் உவப்புக்குரியதாயிருந்தது. ஆயிரக் கணக்கான புலவரை ஆதரித்துத் தமிழணங்கின் திருக்கோயிலாகிய தமிழ்ச்சங்கத்தைப் பரிபாலித்த பாண்டியமன்னர் பரம்பரையிலே பிறந்த பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இவ்வியல்பு வாய்க்கப்பெறாதிருப்பானோ? முன்னே இரண்டொருமுறை நெட்டிமையாரும் நெடும்பல்லியத்தனாரும் பாடியருளிய பாடல்களை அவன் விருப்போடு சூடி, அவர்களை அன்போடு உபசரித்த செய்தியைக் கேட்டோம். வேறு பல புலவரும் இவ்வாறு எண்ணிறந்த பாடல்களைப் பாடிக்கொண்டு வந்து, அவனைக்கண்டு பரிசில் பெற்றுச் சென்றனர்.

இவ்வாறு இம்மன்னர்பிரான் புலவர்க்குப் புரவலனாக இருப்பதைப் பற்றிக் காரிகிழார் என்ற வேளாளப் புலவர் ஒருவர் செவியுற்றார். அவர் செவ்விய இனிய சிறிய சொற்களால் அரும்பொருள்களை அமைத்துக் கவி செய்வதிற் சிறந்த அனுபவம் உடையவர்; உண்மையை உள்ளவாறுரைக்கும் உறுதி படைத்தவர்; வாழ்விலும் தாழ்விலும் மாறாத மன மாண்பினர்; நாடெங்கும்