பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்
63
வலியொத் தீயே வாலி யோனைப் புகழொத் தீயே யிகழுந ரடுநனை முருகொத் தீயே முன்னியது முடித்தலின் ஆங்காங் கவரவ ரொத்தலின் யாங்கும் அரியவும் உளவோ நினக்கே யதனால் இரவலர்க் கருங்கலம் அருகா தீயா யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல் பொன்செய் புனைகலத் தேந்தி நாளும் ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந் தாங்கினி தொழுகுமதி யோங்குவாள் மாற, அங்கண் விசும்பின் ஆரிரு ளகற்றும் வெங்கதிர்ச் செல்வன் போலவும் குடதிசைத் தண்கதிர் மதியம் போலவும் நின்று நிலைஇய ருலகமோ டுடனே.”[1]
அரசன், “உரை நடையைக் காட்டிலும் அருங்கருத்துக்களை அமைத்து அழியாது போற்றச் செய்யுள் நடையே சிறந்தது என்பது இதனால் விளங்குகின்றது. புலவரேறே, இவ்வுதவியைக் காட்டிலும் சிறந்த வுதவி வேறு என்னுளது? இங்கு நம் நாட்டிலேயே யிருந்து பரம்பரையாய்த் தமிழ்ப்பயிரை வளர்த்துவரும் நுமக்கு யாம் உபசாரம் கூறுவதும் குற்றமேயாம். இச்சிறு பொருளைப் பரிசிலாய் ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்," என்று கூறி ஆயிரம் பொன் பரிசில் உதவினன்.
பிறகு இனி ஆவனவற்றிற்கு வேண்டும் முயற்சி செய்யக் கருதிய அமைச்சரும் தண்டத் தலைவரும் பிறரும் அரசனிடம் உத்தரவுகள் பெற்றுக்கொண்டனர். அரசனும் எல்லோர்க்கும் விடை கொடுத்து, அரண்மனைக்குட் சென்றான்.
————————————————————
- ↑ புறநானூறு - செய்யுள், 56.