பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பதிப்புரை

இன்றைய உலகம் மிக அவசரத்தில் வாழும் உலகமாகும். தன் அலுவலகம் செல்லவோ, தான் பயிலும் இடத்திற்குச் செல்லவோ, மிக துரிதப்பட்டு செல்லும் காலமாக இருக்கிறது. இவ்வாறு அவசரத்தில் சாலையில் நடந்தோ, அல்லது வாகனத்தில் செல்லும் பொழுதோ, தான் மட்டும் போய்ச் சேரவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி நிற்க. தன் பாதுகாப்பும், பிறர் பாதுகாப்பும் தன்னிடம் இருக்கின்றது என்பதை மறந்து செல்லும் மக்களுக்கு, தன் கடமைக் கரங்களை நீட்டி 'நில்-கவனி-நட' என்று கூறும் காவல் அதிகாரியைப் போன்று டாக்டர். நவராஜ் செல்லையா அளிக்கும் `பாதுகாப்பு கல்வி' என்ற இந்த நூல் அமைந்திருக்கிறது. .

உடற்கல்வி திட்டத்தின் மூன்று பகுதிகளில், சுகாதாரப் பகுதியில் மிக முக்கியமானது பாதுகாப்புக் கல்வியாகும். வீட்டில் பாதுகாப்பு, பள்ளியில் பாதுகாப்பு, சாலையில் பாதுகாப்பு என்பது எல்லோருக்கும் மிக அவசியம். சிறு பிள்ளைகளை வீட்டில் கவனிக்கும் பெற்றோருக்கும், மாணவ மாணவிகளை கண்காணிக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கும், மற்றும் சாலையில் கடந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் உபயோகப்படும் புத்தகம், இந்த புத்தகமாகும்.