பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. விளையும் பயிர்
முளையிலேயே தெரியும்

பீஹார் மண்ணில் இராசேந்திர பிரசாத் பிறப்பதற்கு முன்பு அவரது முன்னோர்கள் இந்தியாவின் முக்கிய மாநிலமான உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்து பீகாரில் குடியேறினார்கள். பீகாரில், சார்ண் என்ற மாவட்டத்தில் ஜீராதேயி என்ற கிராமத்தில் அவர்கள் வசித்து வந்தார்கள்.

இராஜேந்திர பிரசாத் பாட்டனார், ஜீராதேயீ கிராமத்துக்கு அருகிலே உள்ள ஹதுவா என்ற சிறு சமஸ்தானத்தில், திவானாகப் பணியாற்றி வந்தார். இவர், புள்ளிக் கணக்கில் வல்லவராக இருக்கும் கணக்குப் பிள்ளை குலத்தில் பிறந்தவராதலால், எடுத்த காரியத்தைத் திறமையாகச் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவராக விளங்கியதால், தனது திவான் பணியை ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் செய்து, மக்களிடையேயும், சமஸ்தானத்திலும் புகழ் பெற்றவராக இருந்தார். அவர்களுள் ஒருவரான மகாதேவ சகாய் பெரிய பணக்காரர் அல்லர். ஆனால், ஏழையும் அல்லர்! விளை நிலங்கள் ஓரளவு இருந்தன. ஆனால் வழிவழியாக செல்வாக்குடன் அந்த சமஸ்தானத்திலேயும் கிராமத்திலேயும் பணியாற்றி வாழ்ந்தவர்களாவர்.

மகாதேவ சஹாயருக்கு மகேந்திர பிரசாத் என்ற மகனும், அவருக்குப் பிறகு மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தன.