பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

பாபு இராஜேந்திர பிரசாத்

கடைசியாக, இரோஜேந்திர பிரசாத் என்ற ஆண் குழந்தை 1884 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி பிறந்தார்.

இரோஜேந்திரர் தந்தைக்கு மாந்தோப்புகள் சில இருந்தன. நிலங்களில் தானிய வகைகளைப் பயிரிடுவார். கிராமத்தில் அவரைத் தேடி யார் வந்தாலும் அவரவர்களுக்குரிய உதவிகளும் உணவு வகைகளும் பரிமாறப்படுவதுடன் இல்லாமல், வந்தவர் தேவைகளை அறிந்து அதற்கான சிறு சிறு பொருளதவிகளை தங்களது குடும்ப சக்திக்கேற்றவாறு செய்து வந்தார். அதனால் அக்கிராமத்திலும், அதற்கு அக்கம் பக்கத்துக் கிராம விவசாயிகள் இடையிலும், மகாதேவ சஹாய்க்கு நல்ல மதிப்பும் மரியாதையும் வளர்ந்து வந்தது.

மகாதேவ சஹாய் சமஸ்கிருத மொழியில் வல்லவர். பார்சி மொழியில் வித்வான் பட்டம் பெற்றவர். ஆயுர் வேத மருத்துவத்தில் நல்ல பயிற்சி பெற்றவர். யாருக்கு அவர் சிகிச்சை செய்தாலும் அவர்கள் பூரண உடல் நலம் பெற்று விடுவார்கள். இவ்வாறு பலருக்கு மருத்துவம் செய்ததால் அவர் கைராசிக்காரர் என்ற பெயரும், புகழும் பெற்றார்.

வேதம் ஓதுவதும், சோதிடம் பார்ப்பதும் அவருக்குப் பழக்கமாகும். இந்த இரண்டும் அவருக்கு கிராமத்தில் நல்ல பெயரை உருவாக்கித் தந்தன. இவைகட்கான ஆராய்ச்சி நூல்களை அவர் சேகரித்து வைத்திருந்தார். பயிற்சி பெறுவோருக்குத் தேவையான நூல்களை ஆதாரத்துக்கான ஆய்வுக்காக அடிக்கடி கொடுத்து உதவுவார். இதற்காகவே, அந்த சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் தேசாயிடம் வந்து நூல்களைப் பெற்றுச் செல்வார்கள்.

மகாதேவ சஹாய் குதிரைச் சவாரி செய்வதிலும் பயிற்சி பெற்றிருந்தார். குதிரைச் சவாரியில் இன்பம் அனுபவித்த அவர், தனது செல்லக் குமாரனான ராஜேந்திரருக்கும் குதிரைச் சவாரி செய்யப் பழக்கினார். அதுபோலவே, சிறு வயது கிராமத்து