பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

13

விளையாட்டுக்களான சடுகுடு, கில்லிப்புல் ஆட்டம், நீச்சல் விளையாட்டு, மரம் ஏறிப் பிடிக்கும் ஆட்டம் போன்ற ஆட்டங்களையும் ஆடிக் களிப்பார் இராஜேந்திரர்! ஆனால், மரமேறுவதிலும், நீச்சல் கற்பதிலும் அவருக்கு அச்சம் இருந்ததால், அவற்றின் மீது அவர் ஈடுபாடு காட்டாமலே பிள்ளைகள் மத்தியில் பதுங்கி விடுவார்.

மாவீரன் சிவாஜிக்கு அவரது தாயார் பாரத ராமாயணக் கதைகளைக் கூறி புத்தி புகட்டியதைப் போலவும், மகாத்மா காந்தியடிகளாருக்கு அவரது அன்னையார் அரிச்சந்திரன் மற்றும் பாரத ராமாயண நீதிக்கதைகளை விளக்கிக் கூறுயதைப் போலவும், ராஜேந்திரன் அம்மாவும், அம்மம்மாவும் ராமாயண, பாரதக் கதைகளைக் கூறி நீதிகளை விளக்குவார்கள். இந்து மத ஆன்மீகப் பாடல்களைப் பாடிக் காட்டி, பொருளுரைத்து மகிழ்வார்கள்.

குளிர்காலம் வந்து விட்டாலே போதும், ராஜன் பாபு விடியலில் எழுவார் நீராடுவார்; வெள்ளையாடைகளை அணிவார்; உடன் தனது தாயாரையும் தூக்கத்தை விட்டு எழுப்பி விடுவார்; அந்த அம்மையாரும் குளித்து, உடை பூண்டு, சுத்தமாக பூஜை அறைக்குச் சென்று சிவ பஜனைப் பாடல்களைப் பாடிப் பூஜிப்பார்; சில நேரங்களில் இதிகாசக் கதைகளைப் பிரசங்கம் செய்வது போல தனது பிள்ளைகளுக்குப் போதிப்பார். அந்தப் பஜனைகளைக் கேட்டு, கதைகள் நெறிகளை உள்ளத்தில் பதித்துப் பேரானந்தம் அடைவார். தாயாரும். பாட்டியும் மாறி மாறிக் கூறும் கருத்துக்கள் எல்லாம் பாபு உள்ளத்தில் பசுமரத்து ஆணிபோல பதிந்து விட்டன.

அக்காலத்தில் இந்து - முஸ்லீம் மக்களிடையே எந்த வித இன, மத பேதமும் எப்போதும் எழுந்ததில்லை. இந்துப் பண்டிகை என்றால் முஸ்லீம்கள் குடும்பத்தினருடன் சென்று.கோலாகலமாகக் கொண்டாடி, உடுத்தி, உண்டு மகிழ்ந்து நன்றி கூறி அவரவ்ர் வீடு செல்வார்கள்.