பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

பாபு இராஜேந்திர பிரசாத்

நீடிக்காமல் போனாலும், இந்தி மொழியில் கலந்துள்ள சமஸ்கிருதச் சொற்களைப் புரிந்து கொள்வது மட்டுமன்று பார்சி மொழிச் சொற்களையும், சமஸ்கிருதச் சொற்களையும் கலந்து, அழகாக இந்தியில் பேசும் ஆற்றல் அவருக்குக் கைவந்தக் கலையாகவே இருந்தது.

அவரது மெட்ரிகுலேஷன் படிப்பும், சப்ரா பள்ளியிலேயே முடிவுற்றது. பிறகு, அவர் கல்கத்தா சென்றார். அங்கே உள்ள ‘டப்’ கல்லூரியிலே சேர்ந்தார். அக்கல்லூரியிலே அப்போது ஜகதீச சந்திரபோஸ் தாவரவியல் விஞ்ஞானம் கற்பித்தார். டாக்டர் பி.சி.ராய் ரசாயனப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இந்தக் கல்லூரியில் ராஜேந்திர பாபு படித்த போது, அவரே முதல் மாணவராக விளங்கினார்.

எஃப்.ஏ. தேர்வில் முதல் மாணவராக வெற்றி பெற்றதற்குரிய உபகாரச் சம்பளம் மாதம் இருபத்தைந்து ரூபாயைக் கல்லூரி வழங்கியது. இந்த உபகாரத் தொகை அவருக்குப் பல ஆண்டுகளாகக் கிடைத்து வந்தது. அதற்கடுத்து பி.ஏ. தேர்விலும் அவரே முதல் மாணவமணியானார். கிடைத்து வந்த உபகாரச் சம்பளம் இருபத்தைந்து ரூபாய் தொண்ணூறு ரூபாயாக உயர்ந்தது.

இவ்வாறாகக் கல்வித் துறையின் ஒவ்வொரு பிரிவிலும், ராஜன் பாபு முதல் மாணவராகத் தேர்வு பெற்றுக் கொண்டே வந்ததில் ஓர் உண்மையும், சிறப்பும் இருந்தது. அந்த நேரத்தில் பீகார் மாகாணம் வங்காள மாகாணத்தோடு சேர்ந்திருந்தது. பீகார் மாணவர்கள் எல்லாருமே கல்கத்தா பல்கலைக் கழகத்தில்தான் சேர்ந்து படிக்க வேண்டும்!

வங்க மொழி பேசுவோர் தெளிவான அறிவுடையோர், உணர்ச்சியின் போர்வாட்கள்; ஆனால், பீகார் மக்கள் அவ்வாறல்லர்; அப்பாவிகள்; எடுப்பார் கைப் பிள்ளைகள்; சுறுசுறுப்பு இல்லாமல் எக்காரியத்தையும் ஆமை வேகத்திலே