பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

பாபு இராஜேந்திர பிரசாத்

காட்டுகிறீர்களா? அப்படியானால், அது சிறுமை என்றுதான் நான் வருந்துவேன். எனவே, எனக்கு ஏமாற்றம் அளிக்காமல் எனது கருத்தை ஆமோதித்து ஒப்புதல் உத்தரவு கொடுங்கள் என்று தங்களைப் பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

அண்ணா, என்னையே நான் வஞ்சித்துக் கொள்ள விரும்பவில்லை. தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்பவன் பிறரிடம் எப்படி உண்மையாக நடக்க முடியும்? தாங்கள் இப்போது என்னைத் தடுத்துவிட்டால், அது என் வாழ்நாளையே சிக்கலாக்கி விடும். வழக்குரைஞர் தொழிலில் நான் பணம் பெருக்க முடியும் என்பதும் சந்தேகமாகி விடும். இது மாதிரியான சங்கட நிலையில் என்னைத் தவிக்க விடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இந்தக் கடிதத்திலே எனது ஆசை, எனது ஆசை என்று அடிக்கடி எழுதினேன். என்ன ஆசை அது? வேறு ஒன்றுமில்லை. நாம் பிறந்த பாரத மண்ணுக்கு சிறுபணியாவது செய்ய வேண்டும் என்பதே அந்த ஆசை.

பாட்னா உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞனாகப் பணியாற்றினால் அந்த எனது ஆசை வெற்றி பெறுமா? வக்கீலாகத் தொழில் செய்தால், பணம் நூற்றுக் கணக்கிலும், ஆயிரக் கணக்கிலும் குவிக்கலாம். ஆயிரம், லட்சம், கோடி என்று பணம் படைத்தோரைப் பார்த்தால் சில நேரங்களில் நமக்கு வேதனையாகவும், பரிதாபமாகவும் இருக்கலாம்.

தேசத் தொண்டுகளில் பணியாற்றினால், பிறருக்குப் பயன்பட முடியும். அதனால் பெருமை பெறலாம். கோகலேயைப் போல செல்வாக்கும் புகழும் பெற்ற வேந்தர் யாராவது இருக்கிறார்களா? ஆனால், கோகலே பெரும் ஏழை ஆயிற்றே! அவரை விட நாம் ஏழைகள் தானே!