பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

பாபு இராஜேந்திர பிரசாத்

அநீதியை எப்படியும் போக்க வேண்டும் என்பதே சம்பரான் அவுரிப் போர்!”

-காந்தியடிகள் சுயசரிதை

அங்கு வாழும் விவசாயிகள் தங்களது நிலத்தின் ஆறில் ஒரு பகுதியில் கட்டாயமாக அவுரியைப் பயிரிட வேண்டும். இல்லையேல் நிலம் உழவனுக்குக் கிடைக்காது. அவுரி சாயத்திற்கு இங்கிலாந்து நாட்டில் நல்ல விலை உயர்வு இருந்ததால், பிரிட்டிஷார் இவ்வாறான கெடுபிடிகளை சம்பரான் பகுதி விவசாயிகளுக்குச் செய்து வந்தார்கள். இந்தக் கட்டாயப் பயிர் முறையால் உழவர்கள் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்து வந்தார்கள்.

லக்னோ நகரில் அப்போது 1916 ஆம் ஆண்டில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் தேசிய மகாசபையில், அவுரி பயிரிடுவோரின் அல்லல்களை அகற்றிட சம்பரானில் ஓர் அறப்போர் துவங்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இராஜ்குமார் சுக்லா என்ற விவசாயி ஒருவர் லக்னோ வந்த காந்தியடிகளிடம் விவசாயிகளின் துயர்களை விரிவாக எடுத்துரைத்து அவரைச் சம்பரான் மாவட்டப் பகுதிகளுக்கு அழைத்துக் கொண்டு சென்றார்.

பாட்னா நகர் சென்ற காந்தியார், ராஜன் பாபு வீட்டில் தங்குவதற்காக சென்றார். அப்போது அவர் வீட்டில் இல்லை. வெளியூர் போயிருந்தார். ராஜேந்திரர் இல்லத்து வேலைக்காரர்கள் முன்பின் காந்தியடிகளாரைக் கண்டிராததால், அவரை அவர்கள் மதிக்கவே இல்லை. கிணற்றில் தண்ணீர் எடுக்கவும் அனுமதி தரவில்லை. தீண்டத்தகாமை அவ்வளவு மோசமாக அப்போது அங்கே இருந்தது. அன்னியர்களைக் கிணற்றில் தண்ணீர் சேந்தவும் விடுவதில்லை.

மகாத்மா சம்பரான் சென்றார். விவசாயிகளில் பலரைக் கண்டு விவரம் தெரிந்தார். வேதனைகளாலும், அச்சங்களாலும்