பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

53

துவைத்துக் கொண்டார்கள். என்னென்ன வேலைகள் எங்களுக்கு உண்டோ அவற்றை நாங்களே பிறரது குறுக்கீடுகள் இல்லாமலேயே செய்து கொண்டோம்!

நாங்கள் தங்கியிருந்த அறைகளை நாங்களே பெருக்கிச் சுத்தம் செய்தோம். உணவு தயாரித்து உண்பதற்கு முன்பும் பின்பும் சமையல் பாத்திரங்களைத் துலக்கி சுத்தம் செய்து கொண்டோம். உணவு தயாரிப்பதற்குரிய பொருட்களைக் கடைக்குச் சென்று வாங்கி வந்தோம். ரயிலுக்குப் போனால், எங்களது மூட்டைகளை நாங்களே சுமந்து கொண்டு போனோம், எதற்கும் பிறர் உதவியை எதிர்பார்த்த பழக்கம் எங்களை விட்டே அகன்று, எங்களுக்கு நாங்களே தக்க உதவிகளைச் செய்து கொண்டோம். இதனால், எங்களது உடல் சுறுசுறுப்பும் ஒருவிதத் துறுதுறுப்பும் பெற்றது.

சமையல்காரர்களை அவரவர் வேலையை விட்டு விட்டுப் போக சொன்னதும், காந்திஜீயின் மனைவியான கஸ்தூரி அம்மையார் எங்களைச் சேர்ந்த எல்லோருக்காகவும் உணவு தயாரித்துத் தாயன்புடன் எங்களுக்கு உணவு பரிமாறினார். மகாத்மா காந்தியை நாங்கள் சந்திப்பதற்கு முன்பு, ரயிலில் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்வதைக் கேவலமாகவும், இழிவாகவும் நினைத்தோம். அவரைச் சந்தித்ததற்குப் பிறகு இந்த மனப்போக்கு அடியோடு மாறிவிட்டது.

காந்தியடிகள் அணிகின்ற எளிய ஆடையும், அவர் மக்களுக்காக எவ்விதத் தன்னலமும் இல்லாமல் செய்து வருகின்ற தியாக மனப்பான்மையினையும், பார்த்து நாங்கள் போதிய உணர்வுகளைப் பெற்றோம். அவரது அக்கவர்ச்சி, பழகுந்தன்மை, பொதுநலநோக்கு எங்களது மனதைக் கவர்ந்தன. அந்தக் கவர்ச்சி எங்களது அறிவுக்கான மறுமலர்ச்சியை ஊட்டியது. அதனால், அவரைப் பின்பற்றத் தொடங்கினோம்.