பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

55

நாடு எப்படி அந்த மசோதாவை மதிப்பீடு செய்கின்றது என்பன பற்றியெல்லாம் நேரில் பார்ப்பதற்காகவே காந்தியடிகள் சென்றார்.

சென்னையைச் சேர்ந்த சில்வர் டங் சீனிவாச சாஸ்திரிகள், ரெளலட் மசோதாவை எதிர்த்துப் புயல் போல கடுமையாகக் கண்டனம் செய்து கொண்டிருந்தார். ஆவேசமாக அவர் பேசிக் கொண்டிருந்ததையும், அவரது ஆங்கில அனந்தெறிப்பு வாதத்தையும் கண்டு காந்தியார் பிரமித்தபடியே அமர்ந்திருந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களை நசுக்குவதற்காகக் கொண்டு வந்த சட்டம்தான் ரெளலட் சட்டம். இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது ஏன்? அதன் உள் நோக்கம் என்ன? இந்த சட்டம் மூலமாக யாரானாலும் சரி, எதற்கானாலும் சரி, எப்போதானாலும் சரி, காரணம் சொல்லாமலே கைது செய்யலாம். சிறையில் அடைக்கலாம். சுட்டுத் தள்ளலாம். இந்திய சட்டமன்றக் கவுன்சிலின் அனுமதி பெற்றாலே இந்தக் கொடுமைகளை நடத்தலாம். சுதந்திரம், விடுதலை என்பனவற்றைப் பேசவிடாமல் ‘நா’க்கறுக்கும் சட்டம்தான் இச்சட்டம் என்பதை மறுக்க முடியுமா?

சட்டத் தயாரிப்புக் குழுத் தலைவரான ரெளலட் துரையின் பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டால், அந்தச் சட்டம் செயற்படுத்தப்பட்டால், நாடு சுடுகாடாகும் என்பதை அறிந்து அரசியல்வாதிகள் அஞ்சுகிறார்கள். சாதாரண மக்கள் பயப்படுகிறார்கள். இந்த மசோதா சட்டமானால், அதன் கொடுமைகளை மிக மோசமான விளைவுகளை நாட்டில் ஏற்படுத்துமானால், அதன் பொறுப்பை பிரிட்டிஷ் ஆட்சிதான் ஏற்றாக வேண்டும் என்று ரைட் ஹானரபிள் சீனிவாச சாஸ்திரியார் அனல் தெறிக்க எச்சரித்துப் பேசிய ஆங்கில உரையைக் கண்டு காந்தி தனது புருவங்களை மேலேற்றி பாராட்டி வியந்தார்.

அதே நேரத்தில் சீநிவாச சாஸ்திரியின் கனல் தெறிக்கும் பேச்சைக் கேட்ட இந்திய வைஸ்யராய் கண்கொட்டாமல் அவரைப்