பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

பாப்பா முதல் பாட்டி வரை

மனநலம் சரியில்லை என்று கூறுவார்கள். உடலுறவுக்கு உரிய இயந்திரமாக மனைவியை 80 சதவீத ஆண்கள் நினைப்பதே, இதற்குக் காரணம் மனைவியின் மனநலம் பாதிக்கப்பட்டால், கணவன், மாமனார், மாமியார் ஆகியோர் அனைவரும் சேர்ந்து, மனநல மருத்துவரைச் சந்திப்பதே பலன் அளிக்கும். அப்போது தான், பிரச்சினையின் தன்மையை ஆய்வு செய்து, சிகிச்சை அளிக்க முடியும்.

மனைவியைத் திட்டாதீர்கள் : ஆரம்பத்திலிருந்தே பெற்றோர்கள் பேசிக்கொள்வது, நடவடிக்கைகள், ஆகியவை குழந்தையின் மனத்தில் ஆழமாகப் பதிந்து கொண்டே வரும். பல குடும்பங்களில், உங்க அம்மா சரியான மக்கு, ஒன்னுமே தெரியலே, எனக் குழந்தையின் தந்தை கூறுவது உண்டு. இதுபோன்ற வார்த்தைகள் மிகவும் தவறானவை. தொடர்ந்து செய்யப்படும் இதுபோன்ற செயல்கள் காரணமாக, எதிர் அணுகுமுறையோடு, குழந்தை, வளரும். எனவே, சண்டையிடுவது உள்பட, குழந்தையின் மன நலனைப் பாதிக்கக்கூடிய செயல்களைப் பெற்றோர் செய்யக்கூடாது.

சமுதாய பாதிப்பு: மனநோயை, ஒருவருக்கு ஏற்படும் தனிப்பட்ட நோயாகக் கருதக்கூடாது. ஏனெனில், ஒரு பெண், மன நோயால் பாதிக்கப்பட்டால், அவளது, குழந்தை, கணவர் எனக் குடும்பச் சூழலே பாதிக்கப்படுகிறது. இதனால் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுகிறது, என்பதை நினைவில் கொள்வது அவசியம்.