பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தாய்க்குப் பெண்ணாய், குழந்தைக்குத் தாயாய்

பெண்ணாகப் பிறந்து, திருமணமாகி, தாய்மை அடைவதன் மூலமே, வாழ்க்கை பரிபூரணமாகிறது.

பூப்பெய்தல், திருமணமாதல், மாதவிடாய் நின்று போதல் ஆகியவை, ஒரு பெண்ணின் மூன்று இன்றியமையாத கட்டங்களாகும்.

பெண் குழந்தைகள் விஷயத்தில் 10 வயது முதலே, பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்த வயதில்தான் உடலில் உள்ள சுரப்பிகள் அதிகமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். அப்போது பெண்ணுக்கு மனப் பக்குவம் மிக மிக அவசியம். குழந்தை பூப்பெய்தப் போவதற்கான, இயற்கையின் முன்னேற் பாடாக, உடல் உறுப்புகள் வளர்ச்சி அடைதல் தொடங்கும். பால் உறவு குறித்தும், இனவிருத்தி எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும், தாய் மறைக்காமல் குழந்தைக்குப் பக்குவமாகச் சொல்ல வேண்டும். மனம் போன போக்கில் செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளையும், முன்கூட்டியே தாய் சொல்ல வேண்டும்.