பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

பாப்பா முதல் பாட்டி வரை

புற்றுநோயின் பிரதிபலிப்பு : அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும் முதுகு வலி, உடலில் வேறு ஏதாவது பாகத்தில் உள்ள புற்றுநோயின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம். நுரையீரல், சிறுநீரகம், தைராய்டு ஆகிய இடங்களில் தோன்றிய புற்றுநோய். முதுகெலும்பையும் தாக்கி, அதனால் முதுகு வலி வரலாம்.

உட்காரும் நிலையும் காரணம் : நடுத்தர வயதுள்ள, அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்வோருக்கு வரும், முதுகு வலிக்குக் காரணம், பெரும்பாலும் தகுந்த உடற்பயிற்சி இல்லாததாலும், தாங்கள் அமர்ந்து வேலை செய்யும் இருக்கையில், சரியான முறையில் அமராமல் இருப்பதுமே. நாற்காலி உயராமாகவும், முதுகுத் தண்டின் பாரத்தைக் தாங்கிக் கொள்ளக் கூடியதாகவும் அமைக்கப்பட வேண்டும்.

சாய்வு நாற்காலி நல்லது : உணவுக்குப்பின் ஓய்வெடுத்துக்கொள்ள, துணியால் செய்யப்பட்ட சாய்வு நாற்காலியைப் பயன்படுத்துவது நல்லது. அதில் உள்ள துணி, உடலை ஒட்டியிருப்பதால், உடலின் பளு, பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

அலுவகங்களில் வேலைக்குச் செல்வோர் தினமும் காலை, மாலை இரு வேளையும், குறைந்தது 15 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். காலையில் வெறும் வயிற்றிலும், இரவு உணவுக்கு முன்பும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உணவுப் பழக்கம் : புதுவிதமான உணவுப் பழக்கங்களால் முதுகுவலி வருகிறது. மாமிச உணவு, எண்ணெய்ப் பொருள்கள், ஆகியவை ஒரு சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல், ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுகிறது.