பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

29

கக்கல் : சில சமயம் குழந்தைகள் சாப்பிட்ட உணவை உடனுக்குடனேயே கக்கி விடுவதுண்டு. இது, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையிடமே அதிகம் காணப்படும்.

சிகிச்சை : உணவு உண்டவுடன் வாயை அழுத்தமாக மூடிச் சிறிது நேரம் பிடித்திருந்தால், குழந்தை உணவைக் கக்குவதில்லை. உணவு கொடுக்கும்போது, குழந்தையின் கவனத்தை விளையாட்டில் திருப்பி விடுவதும், இதைத் தடுக்கும் முறைகளில் ஒன்று.

பேதி குழந்தைப் பருவத்தில் தொந்தரவளிக்கும் நோய்களில் ஒன்று. இது முதல் வயதில் அடிக்கடி வருவது. இது 1. சாதாரண பேதி. 2. நச்சுக் கிருமிகளாலான பேதி. 3. பிற காரணங்களால் ஏற்படும் பேதி, என்று மூவகைப்படும்.

முதல்வகையின் காரணங்கள் : 1. உணவூட்டத்தால் ஏற்படும் தவறு: உணவில் கொழுப்புப் பொருள் மிகுந்திருந்தால், வெளுத்த வழுவழுப்பான பேதியும், புரோட்டீன் மிகுந்திருந்தால், தயிர்க்கட்டி போன்ற பேதியும், ஸ்டார்ச்சு அதிகமிருந்தால் கட்டியும் நுரையுமான பேதியும் உண்டாகும். 2. சோர்வு, களைப்பு, கோபதாப உணர்ச்சிகள். 3. தைராய்டு சுரப்புக் குறைவு. 4. சோகை. 5. இரத்தத்தில் அமிலம் மிகுதல். 6. வேகாத உணவுப் பொருள்கள், பழுக்காத கனிகள் முதலிய உண்ணுதல்.

இரண்டாவது வகை: முதல் வகை பேதியின் பொழுது, குடலின் நலம் குறைந்து, நலிந்து நச்சுக்கிருமிகள் தாக்கி, மேலும் பேதியை உண்டாக்கலாம்.

பிற காரணங்களால் ஏற்படும் பேதி : குடலை இயக்குவிக்கும் நரம்புகள், சில குழந்தைகளுக்கு முதல் வயதில் நல்ல உறுதியான நிலையில் இருப்பதில்லை.