பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

பாப்பா முதல் பாட்டி வரை

இவ்வாறு கொடுத்து வந்தால் இரண்டு மூன்று வாரங்களானதும், குழந்தை தானாகக், குறிப்பிட்ட மணி நேரத்தில் விழித்துப் பால் கேட்கும். விழிக்காமல் உறங்கினால், விழிக்கச்செய்து பால் தரவேண்டும். உறங்குகிறது என சும்மா இருந்துவிடக் கூடாது. அழுகிறது என்று பால் தரவும் கூடாது. இரண்டும் குழந்தைக்கு நல்லதல்ல.

இரவில் 10 மணிக்குப் பின் பால் தரலாகாது. நீண்ட நேரம் குழந்தை உறங்குவது, குழந்தைக்கும் தாய்க்கும் நல்லது. முதலில் சில நாட்களில் இரவு 2 மணிக்குக் குழந்தை விழித்து அழக்கூடும். அப்போது துணியை மாற்ற வேண்டியிருந்தால், மாற்றிவிட்டுக் கொதித்து ஆறிய இளஞ்சுடாகவுள்ள நீரைத் தர வேண்டும். நீரில் சர்க்கரை இடலாகாது. நீரைத்தந்து படுக்க வைத்துவிட வேண்டும். இவ்வாறு சில நாட்கள் செய்துவந்தால், பின்னர் இரவு 10 மணிக்குப் பால் குடித்துப் படுத்து உறங்கும் குழந்தை, காலை 6 மணிக்கே விழிக்கும். இரவில் 2 மணிக்குக் கொடுக்கத் தொடங்கிவிட்டால், பிறகு ஒவ்வொரு இரவிலும் விழித்துக்கொள்ளும். அது பின்னர் இரவில் நன்றாக உறங்காத வழக்கம் உடையதாக ஆகிவிடும்.

சில பெண்களின் தனங்களில், போதுமான அளவு பால் உண்டாவதில்லை. அத்தகைய வேளைகளில் எவ்வளவு பால் சுரப்பது, எவ்வளவு பால் தேவை என்று கணித்து, தாய்ப்பால் கொடுத்தவுடன், பசுப்பால் கொடுக்க வேண்டும். இரண்டு பாலும் ஒரே வேளையில் கொடுப்பதால் எவ்விதத் தீங்கும் உண்டாகாது.

குழந்தைக்குத் தாய்ப்பால் 9 திங்கள் கொடுத்த பின்னரே, தாய்ப்பால் குடிப்பதை மறக்கச் செய்ய வேண்டும். அதுவும் திடீரென்று நடைபெறலாகாது. நாலைந்து வாரங்கள் தாய்ப்பால் தருவதைச் சிறிது