பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 த. கோவேந்தன்

வேள்விகளை முறையாகச் செய்யும் கரும காண்ட நெறி ஆகியவை வல்லபருக்கு ஆன்மீக முதலாக அமைந்தது. வல்லபர் தமது கல்வியினைக் காசியிலே பெற்றார். மும்முறை இந்நாடு முழுமையும் பிரயாணம் செய்தார்; விஜய நகரஅரசவையிலே பல விருதுகளைப் பெற்றார். வல்லபர் தமது சமய உரைகளால் எண்ணிறத்தோரை ஈர்த்துத் தமது கருத்துகளைப் பின்பற்றுமாறு செய்தார். அலகர்பாத்திலிருந்து 2-மைல் தொலைவிலேயுள்ள, 'ஆதல் என்னும் ஊரிலே, வல்லபர் தமது வாழ்நாளைக் கழித்தார். காசியிலே, அவர் காலமானார்.

   அவருக்கு இரு புதல்வர்கள் இருந்தனர். விஷ்ணு ஸ்வாமி என்பாரோடு, வல்லபர் உறவு கொண்டார் என்பது ஐயமே. சமஸ்கிருதத்தில் பல நூல்களை வல்லபர் எழுதியுள்ளார். அவற்றுள் சில நூல்கள் முழுமையான வடிவத்திலே கிடைக்கவில்லை. வல்லபர் எழுதிய முக்கியமான நூல்கள், பிரமசூத்திரம், ஜெயிமினிசூத்திரம் ஆகியவற்றிற்கு அமைந்த பேருரைகள் ஆகும். பாகவதம், தத்வாரத்த தீப நிபந்தம், பதினாறு கட்டுரைகள் ஆகிய வையும் வல்லபரால் உரை காணப்பெற்றவற்றையும் எழுதியவையுமாகும்.
   வல்லபரது கருத்து அவரைத் தொடர்ந்து அறிந்தவர்களாலும் அவர் குடும்பத்திலே தோன்றியுள்ளவர்களாலும், இன்றும் வளர்க்கப் பெறுகின்றது. இன்றும், வல்லபரது குடும்பத்தில் வழி வழி வந்தோரைக் காணலாம். இன்று அவரது குடும்பத்தில் எண்பது ஆண் உறுப்பினர்கள் உள்ளனர். வல்லபரைப் பின்பற்று வோருள் பெரும்பாலோர் ஐக்கிய மாகாணங் கள், ராஜபுதனம், செளராஷ்டிரம், குஜராத், பம்பாய் ஆகிய பகுதிகளில் காணப்பெறுகின்றனர். பின்பற்றுவோர், சமூகத்தில் பல நிலைகளில் உள்ளவர்கள். அவர்களுள் அரச குடும்பத்தினர் உண்டு. மிகவும் பிற்பட்ட வகுப்பாளர்களும் உண்டு. -