பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 161 புதிராகும். அளவை நெறியிலே இத்தகைய புதிர்கட்கு விளக்கம் காணுதல் அரிதாகும். அளவை நெறியில் - இயங்கும் சிந்தனையுள் இப்புதிர்கள் அடங்குவன அல்ல. இறைவனது சுயரூப சக்தி யாது? மூவகைகளிலே சித் சக்தியாகவும், ஜீவ சக்தியாகவும், மாயா சக்தியாகவும் தொழிற்படுகின்ற சுயரூப சக்தியின் தன்மை யாது? இறைவனது உண்மை நிலை, உளதாதல், முற்றுணர்வு, வரம்பில் இன்பம் ஆகியவற்றால் ஆனது, இவற்றை சத், சித், ஆனந்தம் என்று குறிக்கின்றோம். இறைவனது சுயரூப சக்தியானது ஒர் ஆனந்தத்தை உடையதாதல் வேண்டும். இறைவனது ஆற்றல் உளதாதலோடு உணர்வோடும் அமையக் காண்கிறோம். உளதாதலிலே ஒர் ஆனந்தம் இருத்தல் வேண்டும். சுயரூப மூவகைக் கூறுகட்கு ஏற்ப இறைவனது மூவகை இயல்புகள் அமைகின்றன. ஹிலாதினி (Hiladini) என்பது இறைவனது ஆனந்த வடிவத்தைக் குறிக்கும். சந்தீநீ (Sandhini),என்பது உளதாதலைக் குறிக்கும். சம்வித் என்பது முற்றுணர்வு அல்லது நுகர்வைக் குறிக்கும். சங்கரரைப் பின்பற்றுவோர் பரம்பொருளின் சுயரூப இலட்சணத்தைத் தடஸ்த்த லட்சணத்தில் இருந்து பிரித்து உணர்த்துகின்றனர். சுயரூப லட்சணமாவது உள் அமைவிலேயே இருப்பதாகும். தடஸ்த்த லட்சணம் புற இயல்பாகும். சச்சிதானந்தம்(உண்மை,உணர்வு, ஆனந்தம்) பரம்பொருளின் உண்மை இயல்பாகும். படைக்கப்பெற்ற உலகிற்கும், உயிர்கட்கும், பரம் பொருட்கும் உள்ள உறவு எவ்வகையில் அமைகிறது? பரம்பொருள் அவித்தையின் மூலம் படைப்போனாக, காப்போனாக, அழிப்போனாகத் தோன்றுகிறது, பொய்த் தோற்றமே, இது புற நிலையில் கட்டுறுவது போல தோன்றுவதாகும். இந்நிலையைத் தடஸ்த்த நிலை