பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1O

இதழாசிரியர்

நறுமண இதழ்ப்பெண்ணே உன்
நலம் காணார் ஞாலம் காணார்


பாரதிதாசன் ஓர் எழுத்து மழை. அம்மழை பொழியாத ஏடுகள் தமிழில் எதுவும் இல்லை. புதிய கவிதை நடைக்குப் பாரதி எப்படி வெளிச்சமாக இருந்தோரோ, அதேபோல், இதழ்ப்பணிக்கும் அவரே வழிகாட்டி பாரதி நடத்திய இந்தியா ஏடு இவரை மிகவும் கவர்ந்தது. 'இந்தியா' ஏடு தாங்கி வந்த கவிதைகளும், அரசியல், சமுதாய, இலக்கியக் கட்டுரைகளும் பாரதிதாசனை மிகவும் கவர்ந்தன.

பாரதிதாசன் நடத்திய ஏடுகள் சில. ஆனால் அவ்வேடுகளில் அவர் ஆற்றிய பணி பல. "மொழிப்பணி, இனப்பணி, நாட்டுப்பணி, சமுதாயப்பணி, உலக அமைதிப்பணி, திருக்குறள் உரைப்பணி, கவிதைப்பணி, கட்டுரைப்பணி, எழுத்துச் சீர்திருத்தப்பணி, இலக்கணப்பணி, திறனாய்வுப்பணி, இசைப்பணி, நாடகப்பணி, திரைப்படக்கலைப்பணி, சொல்லாராய்ச்சிப்பணி, மதிப்புரைப்பணி, காப்பியப்பணி, சிறுகதைப்பணி, திறனாய்வுப்பணி, மருத்துவப்பணி, ஓவிய சிற்பக்கலைப்பணி எனப் பலவகையாக இடம் பெற்றுள்ளன. இதழ்களின் வழி எத்தகைய பணிகளை ஆற்ற இயலும் என்பதற்தோர் எடுத்துக் காட்டாகப் பாரதிதாசன் இதழ்கள் விளங்கியுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளார் முனைவர் சி. பாலசுப்பிரமணியம்.

பாரதிதாசன் புதுவை அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய காரணத்தால், சில ஏடுகளுக்கு மறைவாகவும், சில ஏடுகளுக்கு வெளிப்படையாகவும் ஆசிரியராக இருந்திருக்கிறார்.


*

பாரதிதாசன் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள்.