பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அங்கு அவர் பாடிய பாடல் இந்திய நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்திப் பாடப்பட்டது.

'இப்பரந்த நிலத்திற்கு நாவலந்தீவு என்று பெயர் வைக்க வேண்டும்; நாட்டில் கட்டாயக் கல்வி வேண்டும். மதவெறி தொலைக்கப்பட வேண்டும். இத்திட்டங்கள் நிறைவேறினால் நாட்டில் நிலையான ஒற்றுமை நிலவும்' என்று அவர் தமது பாட்டில் குறிப்பிட்டார். அப்பாடல் முழுதும் 1.7.62 இதழில் வெளியாகியுள்ளது.

'பிரிய நினைத்தவர் பிழை உணர்கின்றனர்'.
'இமையச் சாரலில் ஒருவன் இருமினான்
குமரி வாழ்வான் மருந்துகொண் டோடினான்'

என்ற வரிகள் தேசிய உணர்வோடு கூடிய புதிய நடைக் கருத்துக்கள். 21 இளங்கவிஞர்கள் அவர்களுடைய படத்தோடும் படைப்போடும் இந்த இதழ்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வோர் இதழிலும் சூடான தலையங்கங்களும், பாட்டுக்கிலக்கணம், கேட்டலும் கிளத்தலும் என்ற பகுதிகளும் இடம் பெற்றன. இளங்கவிஞர்களின் வளர்ச்சிக்காகப் புதுப்புது வெண்பாக்களும், கட்டளைக் கலித்துறைகளும், சந்தப்பாடல்களும் பாரதிதாசன் எழுதிக் குவித்தார்.