பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு புதுவை அமைச்சர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் நடுப்பகல் 12 மணியளவில் மயானத்தை அடைந்தது, எந்தச் சடங்குகளும் இல்லாமல் கவிஞர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பாவேந்தர் அடக்கம் செய்யப்பட்டதும், அம்மயானத்திலேயே ஓர் இரங்கற் கூட்டமும் நடைபெற்றது. திருவாளர்கள் ம.பொ. சிவஞானம், ஈ.வி.கே. சம்பத், இரா. நெடுஞ்செழியன், மு. கருணாநிதி, என்.வி. நடராசன், கண்ணதாசன், சுப்பையா (புதுவை பொதுவுடைமைக் கட்சித் தலைவர்), கவி. கா. மு. ஷெரீஃப், குத்தூசி குருசாமி ஆகியோர் பேசினர். அவ்வை திரு.டி.கே. சண்முகம் 'துன்பம் நேர்கையில்' 'உலகப்பன்' ஆகிய பாவேந்தர் பாடல்களைப் பாடினார்.

நெருங்கி வந்த ஞானபீடம்

இந்தியாவிலேயே மதிப்பிற்குரிய மிக உயர்ந்த இலக்கியப் பரிசு ஞானப்பீடப் பரிசு. தமிழ்நாட்டில் முதன் முதலாக இவருக்குத் தான் 1964ஆம் ஆண்டு அப்பரிசு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்பரிசு முடிவு வெளியாவதற்கு முன்பே பாரதிதாசன் இறந்து விட்டார். அப்பரிசு வாழும் கவிஞர்களுக்கு வழங்கும் பரிசு ஆதலால், அது மலையாளக் கவிஞர் சங்கர் குருப்புக்கு அவ்வாண்டு வழங்கப்பட்டது.

பெற்ற சிறப்புக்கள்

1935 இந்தியாவில் முதல் பாட்டேடு துவங்கினார்
(ஸ்ரீசுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்)
1955 தேர்தலில் வெற்றி பெற்றுப் புதுவைச்
சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
1962 மூதறிஞர் இராஜாஜியைக் கொண்டு
பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கிப்
புரட்சிக் கவிஞருக்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
சிறப்புச் செய்தது.
1965 ஏப்ரல் 21ஆம் நாள் புதுவைக் கடற்கரை
சார்ந்த பாப்பம்மாள் கோயில் இடுகாட்டில்
நினைவுமண்டபம் எழுப்பப்பட்டது