பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

பாரதிதாசன்


இவ்விளக்கத்தைப் பொருட்படுத்தாதவர் போல் புலவர் நடித்தாலும் இரவில் வீடுதேடி வந்து சுப்புரத்தினத்தைப் பாராட்டியதோடு, மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு வாத்தியார் சுப்புரத்தினத்தின் புகழ் நிரவியில் உயர்ந்தது.

சுப்புரத்தினத்துக்கு இளமையிலிருந்தே அரசியல் ஈடுபாடு அதிகம். அதனால் அவருக்கு எதிரிகளும் அதிகம். அதனால் அவரை நிலையாக ஓரிடத்தில் இருக்கவிடாமல் ஊர்ஊராக மாற்றிக் கொண்டே இருப்பர். கூனிச்சம்பட்டு என்ற சிற்றூரில் அவர் பட்ட தொல்லை அதிகம். சுப்புரத்தின வாத்தியாருக்கு எந்த விதமான உதவியும் எவரும் செய்யலாகாது என்று கட்டுப்பாடு ஒன்று ஊரில் போடப்பட்டிருந்ததாம். அவருக்கு உண்ண உணவும், இருக்க உறையுளும் கூடக் கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இவர் துணைவியார்க்குப் பிறந்த குழந்தையொன்று இரண்டு நாளில் இறந்து விட்டது. அதன் இறுதிச் சடங்கில் கூட யாரும் கலந்து கொள்ளவில்லை. பக்கத்து ஊர்க்காரர் துணையோடும், ஒத்துழைப்போடும், பிஞ்சுக் குழந்தையின் சடலத்தைத் தாமே எடுத்துக் கொண்டு போய் இடுகாட்டில் இட்டுவிட்டுத் திரும்பினார் சுப்புரத்தினம்.

இளம் மாணவர்கள் விரும்பும் வகையில் பாடம் சொல்லிக் கொடுப்பதில் சுப்புரத்தினம் வல்லவர். கரும்பலகையில் படம் வரைந்து மாணவர்க்குப் புரியும் வகையில் பாடம் நடத்துவார். கல்வியின் சிறப்பை மாணவர்கட்கு உணர்த்தவேண்டி, எளிய பாடல்கள் எழுதிக் தாட்டி மாணவர்களைப் பாடச் சொல்வார்.

அப்பாடல்களில் ஒன்று:

கல்வியின் மிக்கதாம் கல்வி மிகுந்திடில்
செல்வமொன்றில்லையே கழிந்திடும்மடமை
கண்மணி கேளடா கற்பது வேஉன்
நீயென்றன் சொல்லையே முதற் கடமை
செல்வம்பிறர்க்குநாம் இளமையில்கல்லென
தந்திடில் தீர்ந்திடும் இசைக்கும் ஒளவையார்
கல்வி தருந்தொறும் இன்பக் கருத்தைநீ
மிகச் சேர்ந்திடும் சிந்திப்பாய்செவ்வையாய்