பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1
கல்வியும் ஆசிரியப் பணியும்


எட்டுப் பதினொன்று நாற்பத் தாறிட்ட எழிலுறுநாள்
விட்டுப் பிரிந்ததென் ஆசிரியப் பணி மேலும் எனைக்
கட்டுப்படுத்துவ தொன்றில்லை திங்கள் கடைசிதொறும்
தட்டாது வந்திடும் ஐம்பான் வெண் பொற்காக சம்பளமே.

பா.குயில் 10.7.57

சிகரம் போல் செம்மாந்த தோற்றம். முழங்காலைத் தொடும் நீண்ட குப்பாயம். யாருக்கும் குனிந்து பழக்கப்படாத தலை. பயிற்சி பெற்ற மல்லனைப் போன்ற உடம்பு. பணைத் தோள்கள். குறிக் கொண்டு நோக்கும் கூர்த்த பார்வை. வாயில் உள்ள கவிதைக் கனியை உண்ணக் கவிழ்ந்து படுத்திருக்கும் வெளவால் போன்ற பருத்த மீசை, திருவாரூர்த்தேர் மெதுவாகக் குலுங்கி வருவது போன்ற நடை. அன்போடு அதிரப் பேசும் குரல். கூர் முனைகள் கழுத்தின் இருபக்கமும் மார்பில் தொங்கும் காச்மீரச் சால்வை. இதுவே பாவேந்தர் பாரதிதாசன் தோற்றம்.


புதுவை நகரில் 'பள்ளிக் கூடத்தார்' என்று சிறப்புப் பெயர் பெற்ற சுப்பராய முதலியார் குடும்பம் புகழ்பெற்றது. அக்குடும்ப வாரிசான கனகசபைக்கு இரண்டு மனைவியர். இரண்டாம் மனைவியான இலக்குமி அம்மையாருக்குப் பிறந்தவர். சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன். இவர் கர ஆண்டு சித்திரைத் திங்கள் பதினேழாம் நாள் புதன் இரவு பத்தே முக்கால் மணிக்குப் பிறந்தார். இது கி.பி. 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29 ஆம் நாள் ஆகும்.

கனகசபை புதுவையில் மளிகை மண்டி வைத்து நடத்தி வந்தார். மணிலா, வெங்காயம், கோழிமுட்டை, புட்டியில் அடைத்த