பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

23


பேணி உனக்குப் பிரமன் விடுத்தந்தான்
மாணிக் குறளனே! தாலேலோ.

தொட்டிலிற் கிடத்திய குழந்தைக்கு ஆழ்வார் பல அணிகலன்களைப் பூட்ட வேண்டுமென்று ஆசை கொள்கிறார். அவர் நினைத்த மாத்திரத்திலே தேவர்களெல்லாரும் ஓடிவந்து பற்பல அணி வகைகளையும் கொண்டுவந்து குவிக்கிறார்கள்.

சின்னஞ்சிற காலில் அணிவதற்கேற்ற கிண்கிணி யொன்றை இந்திரன் தருகிறான். சங்கின் வலம்புரியென்ன, சேவடிக்கேற்ற பல கிண்கிணிகளென்ன, அங்கைக்கேற்ற சரிவளை என்ன, அரையிலணிவதற்கு நாண், தொடர்கள் என்ன-இத்தனையும் தேவர்கள் கொண்டுவருகிறார்கள். குபேரனுக்குச் சொல்லவா வேண்டும்? மார்பிலணிவதற்கு என்று மாலையும் ஐம்படைத் தாலியும் தருகிறான். கடல் வளங்களையெல்லாம் - முத்துமாலை, உயர்ந்த சாதிப்பவளம் அருமையான சங்குவளை ஆகியவற்றை-வருணன் கொண்டு வருகிறான். ஈசனும் அழகுமிக்க அணிகலன் ஒன்றை அனுப்புகிறான். அது, மணிகளும் ஒளிமிக்க மாதுளம்பூவும் தெழ்கம் இடைவிரவிக் கோத்த அணி.

இத்தனை அணிவகைகளையும் குழந்தைக்கு ஆழ்வார் தம் கற்பனையிலே பூட்டி 'அழேல், அழேல்' என்று தாலாட்டுகிறார். உலக முற்றும் அளந்த அந்தக் குழந்தைக்கு என்ன குறைவு இருக்கப்போகிறது? எல்லாவற்றுக்கும் உடையவனான குழந்தை அவன். எனவே, அழவானேன்?