பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

பாரதிதாசன்


அன்னத்தின் தூவி அனிச்ச
மலர் எடுத்துச்
சின்ன உடலாகச் சித்திரித்த
மெல்லியலே!

மின்னல் ஒளியே விலைமதியா
ரத்தினமே!
கன்னல் பிழிந்து கலந்த
கனிச்சாறே!

மூடத் தனத்தின் முடைநாற்றம்
வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப்
பெட்டகமே!

வேண்டாத சாதி இருட்டு
வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும்
பெருமாட்டி!

புண்ணில் சரம்விடுக்கும் பொய்மதத்தின்
கூட்டத்தைக்
கண்ணில் கனல்சிந்திக் கட்டழிக்க
வந்தவளே!

தெய்விகத்தை நம்பும் திருந்தாத
பெண் குலத்தை
உய்விக்க வந்த உவப்பே
பகுத்தறிவே!