பக்கம்:பாரதித் தமிழ்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் வாழ்க்கை வரலாறு

35


மிதவாதிகள் தங்கள் விருப்பம்போல் காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காகவே இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தேசியவாதிகள் அவர்கள்மேல் குற்றம் சாட்டினர்கள். மிதவாதிகளும் தேசியவாதிகளும் தங்கள் தங்கள் பலத்தைச் சோதனை செய்வதற்காகவே கூட்டுவதுபோல அமைந்தது இந்தக் காங்கிரஸ்.

பாரதியார் தேசீயக் கட்சியை ஆதரித்தார். அதற்குப் பலம் திரட்டும் வேலையில் வ.உ.சிதம்பரம் பிள்ளையோடு சேர்ந்து நின்றார், சுதேசக் கிருஹத்திலிருந்து காங்கிரஸ் டெலிகேட்டுகளுக்குப் பாரதியார் அறிக்கை விடுவதை நாம் காண்கிறோம்.

வ.உ.சி. கண்ட பாரதி என்ற நூலிலும் இது பற்றி விவரம் காணப்படுகிறது. தூத்துக்குடியிளின்று நான் (வ.உ.சி.) சில நண்பர்களுடன் புறப் பட்டுச் சென்னை போய்ச் சேர்ந்தேன். மண்டையன் கூட்டத்தார் வீட்டில் சென்னை ஜன சங்கத்தின் அங்கத்தினர்களாகிய இளந் தேசாபிமானிகளை எல்லாம் ஒரு கூட்டம் கூட்டி ஆலோசனை செய்தோம்.

“பாரதி மாமா (பாரதியாரை வ.உ.சி. அன்புடன் அழைப்பது) நூறு பிரதிநிதிகளுக்குக் குறையாமல் சென்னையிலிருந்து சூரத்துக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டுமென்று சொன்னார்.

“அப் பிரதிநிதிகளில் பணம் இல்லாதவர்களுக்குப் பணம் கொடுத்துக் கூட்டிக்கொண்டு போக வேண்டுமென்றும், அவர்களைச் சூரத்திற்குக் கூட்டிப் போய் வருவதற்குரிய செலவுத் தொகையில் ஒரு பாதியை மண்டையன் கூட்டத் தலைவர் ஸ்ரீநிவாஸாசாரியும், மற்றாெரு பாதியை நானும் கொடுக்க வேண்டுமென்றும் எங்களுக்குள் முடிவு செய்து கொண்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/35&oldid=1539904" இலிருந்து மீள்விக்கப்பட்டது