பக்கம்:பாரதியம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயரிட்டு, மூன்று பாடல்களைச் சிறு பிரசுரமாக அச்சிட்டு வழங்கினார். 'பாரதியாரின் கவிதை உருக்கந்தான் ஓர் ராஜீய எதிரியிடமும் இந்தப் புகழ்ச்சியை வெளியாக்கியது” என்பார் வி. சக்கரைச் செட்டியார். இச்சிறு பிரசுரநூல் வெளியீட்டிற்குப் பின், பாரதியாரே உற்சாகமடைந்து, நண்பர்களின் உதவிகளைப் பெற்று, அவ்வப்போது தாம் பத்திரிக்கைகளில் எழுதிய தேசபக்திப் பாடல்களைத் தொகுத்து, 1908 ஜனவரியில் ஸ்வதேச கீதங்கள் (முதற்பாகம்) என்று தலைப்பிட்டுப் பிரசுரித்தார். ‘இதன் பெயரைக் கேட்கும் போதே, இத்திரட்டு நம்மவர்க்கு ஒரு புதுவழியைக் கற்பிக்க வந்ததென்பது விளங்கும்’ என்று மதிப்புரை வரைந்தார், செந்தமிழ் வித்தகர் மு.ராகவையங்கார். நம்மவர்க்குப் புது வழிகாட்டும், இக்கவிதை நூலைத் தொடர்ந்து, தேசபக்த திலகமான பாலகங்காதர திலகருக்குத்தமிழ்நாட்டில் ஆதரவு தேடும் பொருட்டாகப் புதிய கட்சியின் கோட்பாடுகள் என்ற மொழி பெயர்ப்பு நூலையும், சூரத் காங்கிரஸ் மகாநாட்டுக்குப் பிரயாணப்பட்ட செய்திகளை விளக்கும் எங்கள் காங்கிரஸ் யாத்திரை என்ற வரலாற்று நூலையும் பாரதியாரே வெளியீடு செய்தார். உள்ளன்பு மிகுதி காரணமாக நூல் பிரசுர முயற்சிகளில் ஈடுபட்ட பாரதிக்குத் தொடர்ந்து சென்னையில் அப்பணியில் ஈடுபட முடியாத நிலை தோன்றுகிறது. அப்போது பெயர் போட்டுக் கொள்ளாமல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த இந்தியா பத்திரிகை மீது ராஜத் துரோகக் குற்றத்திற்காக பிரிட்டிஷ் அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் பதிவு பெற்ற ஆசிரியர் என்ற முறையில் எம்.சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்பாகத் தம்மையும் எப்படியாவது கைது செய்ய, அதிகாரிகள் பொய்ச் சாட்சிகள் தயாரிக்க முற்பட்டதை நண்பர்கள் மூலம் அறிந்தார் பாரதி. எனவே அவர் 1908 செப்டம்பரில் புதுவையையடைந்து, பிரெஞ்சு ஆட்சியில் அடைக்கலம் புகுந்தார். புதுவை சென்ற பாரதி சும்மா இருக்கவில்லை. பத்திரிகைத் தொழிலைக் கவனித்துக்கொண்டே நூல் பிரசுர முயற்சியிலும் பெரிதும் ஈடுபடலானார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/11&oldid=817075" இலிருந்து மீள்விக்கப்பட்டது