பக்கம்:பாரதியம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலைவாய்ப்பு கருதியுமான நட்பு முரண்பாடு. இவ்விரண்டின் சேர்க்கையின் வெளிப்பாடுகளாகவே சுதேசியம், அன்னியப் பொருள் மறுப்பு போன்ற பொருளாதார முழக்கங்கள் எழுந்தன. பஞ்சாபில் நீண்ட நெடுங்காலமாக ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இராணுவ விவசாயக் கலகங்கள் நடந்துள்ளன. இங்கே இயற்றப்பட்ட பல்வேறு மக்கள் விரோதச்சட்டங்களினால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இராணுவக் குணாம்சம் மிக்க தேசிய இனமான பஞ்சாபி விவசாய மக்கள், இத்தகைய அரசியல் பிரிவினரோடு இணைந்தனர். சென்னை மாகாணம் இவர்களுடன் இறுதியில் இணைந்தது. இவர்கள் ஏகாதிபத்தியத்துடன் நட்பு முரண்பாடு கொண்டு, அவர்களுடன் பேரம் பேசுவதற்கேற்ற போராட்ட வடிவங்களை மேற்கொண்டனர். இந்தியாவின் நிர்வாகத்தைத் தன் வலிமைக்கு ஏற்றாற் போன்று செலுத்துவதற்காகப் போடப்பட்ட காலனியச் சட்டங்களைப் பயன்படுத்தி, அவற்றின் வரம்புக்குட்பட்டே போராட்டம் நடத்தினர். தீர்மானம் இயற்றல், மனுப்போடுதல், மந்திரிக்கு அனுப்பல் என்பன போன்றவற்றைத் தூங்குமூஞ்சித் திட்டங்கள் எனக் கேலி பேசினர். பத்திரிகைகளில் எழுதுதல், பொது இடங்களில் கூட்டம் போட்டுப் பேசுதல், நடுத்தர வர்க்க இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் அரசியலை முன் வைத்தல் என்பன போன்ற திட்டங்களை வரையறுத்தனர். இவற்றை திலகர் விபின் சந்திரபாலர், லாலா லஜபதிராய் ஆகியோரது படைப்புக்களில் காணலாம். இத்தகைய கட்டத்தில்தான் எட்டயப்புரத்துச் சுப்பையா அரசியலுக்குள் நுழைகின்றார். சுதேசமித்திரனில் மொழி பெயர்ப்பாளராக இருந்து ராஜிய ஞானத்தில் பயிற்சி பெறுவதாகச் சக்கரைச் செட்டியார் குறிப்பிடுகின்றார். ஆனால் இங்கே எழும் கேள்வி எது? இத்தகைய புறநிலைச் சூழல் எப்படி பாரதியின் அகநிலை மனோபாவத்தைப் பாதித்தது? அது மீண்டும் புறநிலைச் சூழலைப் பாதித்தது எப்படி? இங்கே அகநிலை மனோபாவம் முக்கியத்துவம் பெற்று விடுகிறது. இதுதான் புறநிலையதார்த்தத்தின் ஒரு பகுதியைக் கவ்விப்பிடித்து, பாரதியை அரசியலுக்குள் அழைத்துச் சென்றது. பொதுவாக அரசியல் துறையில் படித்தவர்களே ஈடுபட்டனர். அன்றைக்கு, படித்தவர்கள் பெரிதும் பிராமணர்களாகவே இருந்தனர். 11.9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/121&oldid=817088" இலிருந்து மீள்விக்கப்பட்டது