பக்கம்:பாரதியம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாரிடமும் கருத்துரைக்கவோ கலந்துரையாடியதாகவோ தெரிய வில்லை. இவற்றைத் தனி மனிதமயப்படுத்திக் (Individualise) கொண்டிருந்திருக்கலாமே.தவிர பிறர் மயப்படுத்த முனைந்ததாகத் தெரியவில்லை. எனினும் இதன் பாதிப்பு இவரை ஒரு ஜனநாயக வாதியாக (Democrate) உயர்த்தத் தொடங்கிற்று. அரசனின் ஜபர்தஸ்துகள் பாரதிக்குப் பிடிக்கவில்லை. வெறுப்புக் கொண்டார். நெல்லையிலிருந்து வெளியாகும் சர்வ ஜன மித்திரன் என்ற பத்திரிகையில் பணக்காரர்களைத் தாக்கி ஒரு கட்டுரை எழுதுகின்றார். அது அரசனைக் குறித்துத்தான் என யாரோ கோள்மூட்ட ரூ 25 = சம்பளத்திலான வேலை பறிபோயிற்று நண்பர்கள் சமரசம் செய்து வைக்க முயன்றபோது, பாரதி மறுத்துப் பேசினார். “எட்டயபுரம் ராஜா சண்டைக்காய் அளவுக்குப் பூமியை வைத்துக் கொண்டிருப்பவர். உலகம் மிகப்பெரியது. அதிலே எனக்கு இடம் இருக்கிறதென்று சொல்” இவ்வாறு மறுத்துவிட்டார். நடுத்தரவர்க்க அகங்காரத்துடன் கூடிய நிலவுடமைத்துவ எதிர்ப்புக்குரல் இதிலே ஒலிப்பதைக் காணலாம். ஷெல்லியிடமிருந்து பெற்ற கலகக் குணத்தைவிட மேம்பட்ட ஒரு ஜனநாயகவாதியின் தொடக்க காலத்திய தோற்றத்தை இதிலிருந்து ஊகிக்கலாம். சமூக சீர்திருத்தம், நிலவுடமைத்துவ எதிர்ப்புக் குரல், ஜனநாயகத் தன்மை ஆகியவற்றின் இடையிடையே அவனது இந்து சமயக் கருத்துப் பதிவுகளும் அழுத்தம் பெற்றுக் கொண்டே வந்தன. வேதாந்த விசாரணைகளில் ஈடுபட்டு, பண்டிதர்களுடன் சர்ச்சையிட்டு, அவற்றின் விளக்கத்தை எளிமையாகக் கூறும் பணி பாரதிக்கு இருந்தது எனக் கண்டோம். காசியில் இந்துச்சாமியார்களின் உறவினால் அழுத்தம் பெற்ற இந்து சமய மீட்பு வாதக் கருத்துகளை இப்பணி இன்னும் உறுதிப்படுத்தியது. எட்டயபுரம் வாழ்க்கையில் அவர் எழுதி வெளிவந்த தனிமை இரக்கம், தாயுமானவர் வாழ்த்து என்ற பாடல்களில் இத்தகைய உணர்வின் பொறிகளைக் காணலாம். இத்தகைய உயர்வுகளோடே அவர் மதுரை சேதுபதிப் பள்ளியில் தமிழாசிரியராகச் சேர்ந்தார். 123

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/125&oldid=817092" இலிருந்து மீள்விக்கப்பட்டது