பக்கம்:பாரதியம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுகின்றன. அனைத்துக்கும் மேலாக அவரது சிட்டுக்குருவி என்னும் கட்டுரை, குருவியை கவலையின்றும் விடுபட்ட 'வீடு” நிலையாக உருவகிக்கிறது. ஷெல்லி வானம்பாடியைப் பார்த்து ஏங்குவது போல் பாரதி சிட்டுக்குருவியைப் பார்த்து ஏங்குகிறார். ஆனால் பாரதி மனிதத்துவத்தை முழுக்க இழக்கத் தயாராக இல்லை. ஆராய்ச்சி, பக்தி, சங்கீதம், கவிதை முதலிய இன்பங்கள் மனிதனுக்குக் கைகூடும்; குருவிக்கு இயல்பில்லை. ஆனாலும் அந்த இரண்டுவித இயல்பும் பெற்றால் நான்பரிபூரணஇன்பத்தை அடைய மாட்டேனா எனக்குறிக்கிறார். "இறுதியாக அதைவிடு, விடுவிடு, தொழிலை விடாதே, உணவை விடாதே, பேட்டை விடாதே, கட்டைவிடாதே, குஞ்சை விடாதே, உள்ளக்கட்டை அவிழ்த்துவிடு. விண் யோசைைனயை விடு, துன்பத்தை விடு' என்ற புதிய விடுதலைத் தத்துவத்தின் விளக்கமாகக் காண்கிறார். பாரதியின் குயிற்பாட்டிலே, இந்த மனித இனப் பறவை இனக் காதல் வேட்கை, பரம்பொருளின் காதல்வேட்கை, முழுவடிவம் பெறுகிறது. அங்கு குயிலின் கீதம், ஆத்மாவின் கீதம், காதலாக வெளிப்படுகிறது. வையத்தில், வாழ்வின் அடிநாதம், காதல். அதனால்தான் குயிலின் நாதமும் காதலும் இணைக்கப்பட்டுள்ளன. காதலின் முழுமையான அருள் ஒளியோடும் இணைக்கப்பட்டுள்ளது; காதலின் நிறைவு நிலையும் வெளிப்பாடும் இசையாகிறது. பூதங்கள் கலந்திடும் புதுமைக்கும் நாதங்கள் கலந்திடும் நயத்திற்கும் உள்ள ஒற்றுமையைப் பாரதி குறிப்பதும் இந்த அடிப்படையில்தான். படைப்புச் சக்தியின் இயக்க இசையும், பாடலின் இசையும் ஒன்றே. பித்தகோரசின் தத்துவத்தின் நிழலையும் இங்கு பார்க்கலாம். எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கும்போது குயிலை நாதத்தத்துவமாக, நாதப்பிம்பமாகப் பார்ப்பதில் தவறில்லை. “காற்றை முன்னையூதினாய், காணரிய வானவெளி தோற்று வித்தாய்’ என்று பிரம்மத்தின் அருவ நிலையினைக் குறித்துப் பின் “ஞாலம் பலவினிலும் நாடோறும் தாம் பிறந்து தோன்றி மறையும்’ தோற்றங்களையும், தொடர்புகளையும் பிரம்மத்தின் காட்சி நிலையாகப் படைப்பு நிலையைக் குறிக்கிறார். குயிலின் இசையை, வாழ்வுச் சக்தியின் உருவகமாக, அதன் நுண்ணிய தெளிவாகவும் காண்கிறார். குயிலைப் பிரம்மத்தின் படைப்புச் சக்தியாகவும், அது பாடுவது அந்தப் படைப்புச் சக்தியின் காதல் வேட்கையாகவும் கொள்வது தவறில்லை. 139

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/141&oldid=817110" இலிருந்து மீள்விக்கப்பட்டது