பக்கம்:பாரதியம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேற்று செத்தது உண்மை, ஆனால் நீ இன்னும் வாழ்வது அதைவிட உண்மை. புதுவைக் கடலோரம் அலைதொட்ட ஈரமணலில் எடையற்ற நண்டுகளுடன் ஒடிப்பிடித்து விளையாடும் காலை நேரத்துக் காகங்களைப் போய்க் கேள். இன்னமும் நீ வாழ்வதைச் சொல்லும். பாரதி, உனக்கு மரணமில்லை. பொய்யாய்ப், பழங்கதையாய்க், கனவாய் மெல்லப் போவதற்கு நீ கவிஞனல்ல; கவிதை. காற்றில் கரைந்து போவதற்கு நீ அரசியல் கோஷமல்ல, சொன்னால் சுடும் மந்திரம். செவிக்குள் திரவப்பொய்கையில் சிற்றலை எழுப்பி சிதைந்து போவதற்கு நீ வெற்று வார்த்தையல்ல. அர்த்தம் சூல்கொண்ட மெளனம். பாரதி, உனக்கு மரணமில்லை, நீ வாழ்கிறாய். 176

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/176&oldid=817148" இலிருந்து மீள்விக்கப்பட்டது