பக்கம்:பாரதியம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலே கண்ட கடிதம் பாரதியின் திறமான தரமான பிரசுர உள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. சொல்லப்போனால், பாரதியார் நம் நூல்கள் வெளிப்படுவதில் மட்டும் ஆர்வம் காட்டவில்லை; வெளிப்படும் நூல்கள் எந்த முறையில் அமைய வேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை காட்டினார். ஆம்; மேனாடுகளில் எப்படி நூல்கள் அச்சிடப்படுகின்றனவோ, அப்படியே இங்கும் தமது நூல்கள் அச்சிடப்படவேண்டும் என்றே விரும்பியவர் பாரதியார். ஆனால் இதன்படி எந்தவொரு நூலும் பிரசுரமானதாகச் செய்தி இல்லை. தாம் எதிர்பார்த்து நம்பிய நண்பர்களின் உதவி உரிய காலத்தில் கிடைக்காத நிலையிலும், பாரதியார் தமது நூல் பிரசுர முயற்சிகளைக் கைவிட்டாரல்லர். புதுச்சேரியிலிருந்து தாம் கொண்டுவந்திருந்த கைப்பிரதிகளையெல்லாம் ஒழுங்குபடுத்துவதிலும், அவற்றை வரிசைப்படுத்தி வெளியிடத் திட்டமிடுவதிலும் மிகத் தீவிரமாகத் தொழிற்பட்டார், பாரதியார். இதையே வேறுவகையில் சொல் வதானால், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தமது நூல்கள் பிரசுரமாக வேண்டும் என்ற அதே கவலையாக - கனவாக துடிப்பாக இருந்தார் பாரதி எனலாம். தம்முடைய படைப்பு இலக்கியச் செல்வங்களை நாற்பது புத்தகங்களாகப் பிரித்து, ஒவ்வொரு புத்தகத்திலும் 10,000பிரதிகள் மிக நேர்த்தியான முறையில், மேனாட்டு நூல்களுக்கு இணையாக அழகழகான படங்களுடன் அச்சிட உத்தேசித்திருப்பதாகவும், நூல்களை மலிவான விலையில் விற்பனை செய்யத் திட்டமிட்டிருப் பதாகவும், செலவு வகைகளுக்காக முடிந்தமட்டில் ஒரு தொகையைக் கடனாக அனுப்பித் தருமாறும், கடன் தொகைகளுக்கு ஸ்டாம்பு ஒட்டின புரோ நோட்” எழுதிக் கொடுப்பதாகவும் ஓர் சுற்றறிக் கையைத் தயாரித்து 1920 ஜூன் மாத வாக்கில் தமது நண்பர்களுக்கும், இலக்கிய அன்பர்களுக்கும், தேசிய வாதிகளுக்கும் அனுப்பினார். இந்தக் கடிதச் சுற்றறிக்கையினால் யாதொரு பயனும் விளைந்ததாகத் தெரியவில்லை. என்றாலும், இந்தச் சுற்றறிக்கை வெளியான சந்தர்ப்பத்தில்தான், சுதேசமித்திரன் காரியாலயம் பாரத ஜன சபையின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டது.

  1. சுற்றறிக்கையின் முழுப்பகுதியை வானவில் பிரசுர நூற்பெயர்க் கோவை நூலுள் 24 - 2ஆம் பக்கங்களில் காண்க.

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/18&oldid=817152" இலிருந்து மீள்விக்கப்பட்டது