பக்கம்:பாரதியம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று பாரதி ‘சுயசரிதை யில் பாடியுள்ள இளஞ்சிறுமியார் என்ற கேள்வி எழுகிறது. பத்து வயதில் தன் மனக்கற்பனையில் ஆசையோடு ஒரு இளஞ் சிறுமியைப் பாரதி இப்படி எண்ணிப் பார்த்திருக்கமுடியும் என்று நம்ப முடியவில்லை. அவள்தான் தாய்க்குப் பதிலி என்றும் எப்படி நம்ப முடியும்? தாய்க்குப் பதிலிதான் அந்த இளஞ்சிறுமி என்றால், தாயின் அன்புக்கும் இளஞ்சிறுமியின்பாலுணர்ச்சி கலந்த அன்புக்கும் இடையே வேறுபாடு இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது. பாரதி சுயசரிதை” யில் இந்த இளஞ்சிறுமியைப் பாடுமிடத்தில் 'பிள்ளைக்காதல்’ என்றே தலைப்பிட்டிருக்கிறார். தன் தாத்தாவின் வீட்டில் அவர் சிவபூசை செய்து கொண்டிருந்த போது, பாரதி ஒரு அர்ச்சனைப் பூவை எடுத்துக் கொண்டு அந்தச் சிறுமியிடம் கொடுக்கச் சென்றதாகப் பாரதியே தெரிவிக்கிறார். இதனால் 'பிள்ளைக்காதல்’ என்ற சொற்றொடர் காட்டுவது உண்மை நடப்பு என்றே சிந்திக்க வைக்கிறது. தாத்தா வீட்டுக்கு அருகில் அந்த இளம்பெண் வாழ்ந்தவளாக இருக்க வேண்டும் என்று நம்ப வைக்கிறது. அந்த இளஞ்சிறுமி பாரதியின் கவிமனத்தில் தோன்றிய கலைவாணிதான் என்று கூறும் விளக்கம், பாரதியைத் தெய்வீகக் கவிஞர் என்று உயர்த்திப் பேச விரும்புவதின் விளைவு என்றுதான் கூறமுடியும். மேலும் “மூன்று காதல்’ என்ற கவிதையில் பாரதி கலைமகளின் மீது தாம் கொண்ட காதலைப் பாடிய முறைக்கும், ‘சுயசரிதையில் இளஞ்சிறுமியைப் பாடிய முறைக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. கலைமகளைப் பாடிய பாட்டில் ஏடு தரித்தி ருப்பாள் என்றும், பதம் படிப்பாள் என்றும், ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள் என்றும், கன்னிக்கவிதை கொணர்ந்து தந்தாள்' என்றும் வந்துள்ள உருவக வருணனைகள், ‘சுயசரிதை” யில் இளஞ்சிறுமியைப் பாடுமிடத்தில் இடம்பெறவில்லை. இளஞ் சிறுமியின் வருணனையில் மானிடக் காதலின் புனைவியல் பண்பு வந்திருப்பதை இங்கே ஒப்பிட்டு உணரலாம். இதுதான் யதார்த்தமான வழியில் வாழ்க்கைச்சரித முறைத் திறனாய்வு செய்யும் போது புலப்படுகிறது. 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/29&oldid=817215" இலிருந்து மீள்விக்கப்பட்டது