பக்கம்:பாரதியம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போக்கிற்கு மூலவராக்குவது முற்றிலும் சாத்தியப்படாது. அதுபோலவே, இந்திய மரபில் வந்த சமயப்போக்கு, பாரதியிடம் தேசபக்தியாகச் சிறுத்தது என்று மதிப்பிடலும் பாரதியைச் சரியாகப் புரிந்ததாகாது. சமயத்தினுள்ளும் உள்ள இடதுசாரிச் சார்புடையவர் பாரதியார். இதுதான் பாரதியின்தேசபக்தியினுள்ளும் சென்று ஆற்றல் பெறுகிறது. பாரதியின் அத்வைதம், பிரபஞ்சம் மனிதன் பற்றிய ஒருமைப் பார்வையை உட்கொண்டது. இதுபற்றி இங்கு விளக்கமாகப் பார்த்துக் கொள்வோம். பிரபஞ்சத்தின் இறுதி உண்மையை (The ultimatereality) நாம் எப்படி மதிப்பீடு செய்கிறோம்? செய்ய முடியும்? பிரபஞ்சத்தின் இறுதிப் பொருள் என்று தேடிக் கொண்டே சென்றால்... இன்று வரை இப்பிரச்சனை முற்றாகத் தீர்க்கப்படாத அளவு சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது. இந்நிலையில், இறுதியுண்மை பற்றிப் பல்வகைக் கோட்பாடுகளும் இவற்றுக்கிடையிலான விவாதங்களும் எழுவது, தவிர்க்க இயலாதது மட்டுமல்ல. தேவையானதுமாகும். இப்போக்கில்தான், இறுதிப் பொருள் அணுக்களே என்ற ஒரு கோட்பாடு பழங்காலத்திலேயே இந்திய மெய்யியல் வாதிகளாகிய வைசேசிகளுக்கிடையிலும் எழுந்தது. இறுதிப் பொருள் அணு என்றால், அதற்குள்ளும் நுழைய முயன்று, அப்படி ஒன்று எப்படி இருக்க முடியும் என்று கேட்டு, அப்படி ஒன்றுமே இல்லை; 'இருப்பது சூன்யம் மட்டுமே என்றனர் பெளத்தர். அது ஒன்றும் இல்லாததும் இல்லை; அது, ஒன்று என்றும் பல என்றும், உள்ளது என்றும் இல்லது என்றும் மனித விளக்கத்திற்கு எட்டுவது, எட்டாதது என்றும், அதுவே பிருமம் என்றும் கூறியது அக்கால அத்வைதம். இத்தகைய தேட்டம் மேலும் எத்தனையோ வகைகளில் பொருள்களில் தொடர்கின்றன. பூதமே இறுதிப் பொருள் என்று உலகாயதரும், பிரகிருதியே என்று சாங்கியரும் கூறினர். இறுதியுண்மை பற்றிச் சரிவர அறிய முடியாத அக்காலத்தில் இத்தகைய தேடல் பற்றிய ஆர்வமும் முயற்சியும் விளக்கங்களும் அற்புதமானவை. வரலாற்றுக்குத் தேவையானவை. அறிவார்ந்த விளக்கங்கள் அடைபட்ட நிலையில்தான், இறுதியுண்மை, இறைமை என்ற கருத்தோட்டமும் எழுந்தது. இந்த இறைமைக் கோட்பாட்டிற்கு, இறைமை மறுப்போடு தொடங்கிய பல சமயங்கள் 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/35&oldid=817223" இலிருந்து மீள்விக்கப்பட்டது