பக்கம்:பாரதியம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராணுவ ஆட்சியில் காணப்படக்கூடிய சுடுகாட்டு அமைதி ஜனநாயக வாழ்க்கை முறையில் ஒருக்காலும் ஏற்பட இயலாது. அதற்காக ராணுவ ஆட்சியே வேண்டும் என்று யாரும் கோர மாட்டார்கள். ஜனநாயக நெறிமுறைகளில் காணப்படும் ஊழல்களால் விரக்தியடைந்த சிலர் ராணுவ ஆட்சியே மேல் என்பது ஒரு வகைத் திண்ணைப் பேச்சாகும். மனித உரிமைகளின் சமாதி மீது எழுப்பப்படும் சர்வாதிகாரக் கோபுரம் எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்தாலும் அது சரித்திரத்தால் நிராகரிக்கப்பட்ட ஒன்றேயாகும். நம் தமிழ்ப்புலவர்கள் சங்க காலத்தைப் பொற்காலம் என்றே போற்றுகிறார்கள். சங்க கால மக்கள் நம் முன்னோர்கள்; நம் பாட்டன் பாட்டிமார்கள்; உறவினர்கள். ஆகவே அவர்களைப் பெருமைப்படுத்துவதில் நமக்கு மனக்குறை எதுவுமில்லை. சங்ககாலம் எந்த வகையில் பொற் காலமாக இருந்திருந்தாலும் மனித உரிமைகளை மதித்த காலம் என்று யாரும் நிறுவிட முடியாது. சங்க காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று இங்கே கருதத்தக்கது. ஆற்றில் மிதந்து வந்த பழத்தை எடுத்துத் தின்றுவிட்டாள் ஒருத்தி. அந்தப் பழம் நன்னன் என்ற தலைவனுக்குச் சொந்தமான மரத்திலிருந்து உதிர்ந்தது. தனக்கு உரிமையான பழத்தைத் தன் அனுமதியில்லாமல் தின்றுவிட்ட காரணத்திற்காக அந்தப் பெண்ணைக் கொன்றான் அந்தத் தலைவன். அந்தப் பழத்திற்கு ஈடாகத் தங்கம் தரத் தயாராக இருந்தனர் அந்தப் பெண்ணின் உறவினர்கள். ஆனால் அதை ஏற்காமல் அவளைக் கொலை செய்தான் அந்தப்பாவி என்பது வரலாறு. அவனைப் பெண் கொலை புரிந்த நன்னன் என்கிறது அகநானூறு. இந்தக் காலத்தில் இது சாத்தியமா? - என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்புக்கே உரிய கொடுமைகள் இவை. சிலப்பதிகாரத்திலும் இத்தகைய உரிமையற்ற நிலையை நன்கு காணலாம். 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/42&oldid=817231" இலிருந்து மீள்விக்கப்பட்டது