பக்கம்:பாரதியம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாக அமைப்பில் மக்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட என்ன வாய்ப்பு இருக்க முடியும்? மன்னன் நீதி வழங்கிய முறையில் தவறு நேர்ந்துவிட்டது. அது பற்றிக் கண்ணகி யாரிடம் முறையிட வேண்டிவந்தது? தவறாக நீதி வழங்கிய குற்றத்திற்கு ஆளானஅதே மன்னனிடம் கண்ணகி முறையிட வேண்டி வந்தது. ஆக, குற்றவாளியே நீதிபதியாகி மேல் முறையீட்டைக் (Appeal) கேட்டுத் தீர்ப்பு வழங்க வேண்டிய நிலையில் மன்னராட்சி முறைக் காலத்து நீதி நிர்வாக அமைப்புகள் இருந்தன என்பது சிலப்பதிகாரத்தால் நமக்கு விளங்கும் உண்மையாகும். ஆகவே எவ்வளவு குறைபாடுகள் இருந்த போதிலும் இன்றைய ஜனநாயக யுகத்திற்கு மன்னராட்சி முறை நிலவிய காலம் ஈடாகாது. வரலாற்று ஆராய்ச்சி உடையவர்களும், முற்போக்கான கவிஞர்களும் சிந்தனையாளர்களும் இதனை ஏற்கின்றனர். ஆனால் இலக்கியத்தையும், மொழியையும் ஒரு வகை வழிபாட்டு மனோபாவத்தோடு பார்ப்பவர்கள் இதனை உணர்வதில்லை. பாரதி இத்தகைய கிழட்டு மனோபாவத்திற்கு மாறானவன் என்பது ஒரு மாபெரும் உண்மையாகும். பாரதியும் சில இடங்களில் பழம்பெருமை பேசுவது மெய்யே. ஆனால் எந்த இடத்திலும் மன்னராட்சி முறையைச் சிறப்பித்து அல்லது மக்களாட்சி முறையை இழிவுபடுத்திப் பேசவே இல்லை. அதற்கு மாறாகத் தனக்கு மன்னராட்சி முறையில் நம்பிக்கை இல்லை என்று தெளிவாகக் கூறுவதோடு, அந்தக்கால நீதி நிர்வாகம் சரிவர அமையவில்லை என்பதையும் குறிப்பிடுகிறான். இசையறிஞர் சுப்புராம தீட்சிதரைப் பற்றிய பாட்டில், “மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர் தங்களையும் வணங்க லாதேன்” என்று கொள்கையறிவிப்பு ஒன்றையே செய்கிறான். எட்டயபுரம் மன்னருக்கு எழுதிய சீட்டுக்கவியில், 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/44&oldid=817234" இலிருந்து மீள்விக்கப்பட்டது